Jun 5, 2026 - 09:02 PM -
0
2026ஆம் ஆண்டுக்கான தேசிய கணக்காய்வு அலுவலகத்தின் வருடாந்த வேலைத்திட்டத்தின் முன்னேற்றம் குறித்து, கணக்காய்வாளர் நாயகம் சமுதிகா ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் குழுவினர் அரசாங்க நிதி பற்றிய குழுவுக்கு விளக்கமளித்துள்ளனர்.
பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா தலைமையில், பிரதி அமைச்சர்களான சதுரங்க அபேசிங்க, நிஷாந்த ஜயவீர மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களான ரவி கருணாநாயக்க, ஹர்ஷன ராஜகருணா, சம்பிக ஹெட்டியாரச்சி, லக்மாலி ஹேமச்சந்திர ஆகியோரின் பங்கேற்புடன், கடந்த 2ஆம் திகதி பாராளுமன்றத்தில் அரசாங்க நிதி பற்றிய குழு கூடியபோதே இவ்விடயம் குறித்து விளக்கமளிக்கப்பட்டுள்ளது.
இங்கு சமூர்த்தி வங்கிகளை கணக்காய்வு செய்வது குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளதுடன், 2025ஆம் ஆண்டுக்குரிய கணக்காய்வை மேற்கொள்வதற்கு முன்னர் 2023 மற்றும் 2024ஆம் ஆண்டுகளுக்கான இரண்டு கணக்காய்வுகளும் நிறைவு செய்யப்பட வேண்டும் என வருகை தந்திருந்த அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
அந்த கணக்காய்வு பணிகளை வெளித்தரப்பினரிடம் ஒப்படைப்பதற்கான கொள்முதல் நடவடிக்கைகள் இதுவரையில் நிறைவடையவில்லை என்றும் அதிகாரிகள் இங்கு குறிப்பிட்டுள்ளனர்.
இப்பணிகளுக்காக சுமார் 300 அதிகாரிகள் தேவைப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டிருந்த போதிலும், ஒன்றரை வருட காலத்திற்குள் இதற்காக 200 அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது போதுமானது என கணக்காய்வாளர் நாயகம் இங்கு தெரிவித்தார்.
மேலும், இந்த வங்கிகளை கணக்காய்வு செய்வது தொடர்பாக முறையான ஒரு வழிமுறை இல்லை என்றும் அதிகாரிகள் சுட்டிக்காட்டினர்.
இதற்கமைய, இது குறித்து ஆய்வு செய்து, சமூர்த்தி வங்கிகள் மற்றும் சங்கங்களைத் கணக்காய்வு செய்வதற்குத் தேவையான வழிமுறையை ஒரு முன்மொழிவாகக் குழுவிடம் சமர்ப்பிக்குமாறு குழுவின் தலைவர் பரிந்துரைத்தார்.
அத்துடன், சைபர் பாதுகாப்பு செயல்முறை குறித்தும் இங்கு கவனம் செலுத்தப்பட்டுள்ளதுடன், கணக்காய்வு நடவடிக்கைகளுக்கான தகவல் தொழில்நுட்ப நிபுணர்கள், திணைக்களத்தில் இல்லை என்றும், கட்டமைப்பு தணிக்கையின் போது அது வெளித்தரப்பினரால் மேற்கொள்ளப்படுவதாகவும் தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் மேலும் தெரிவித்தனர்.
அதேபோல், 'ரீ பில்டிங் ஸ்ரீ லங்கா' (Rebuilding Sri Lanka) வேலைத்திட்டத்திற்குரிய கணக்கு குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது.
'Rebuilding Sri Lanka' என்ற பெயரில் எந்தவொரு சட்டரீதியான நிதியமும் இல்லை என்பது அங்கு தெரியவந்துள்ளதுடன், இது திறைசேரியின் பிரதிச் செயலாளரின் கீழ் உள்ள ஒரு கணக்கு மாத்திரமே என தேசிய கணக்காய்வு அலுவலக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
மேலும், அதன் மூலம் இதுவரையில் எந்தவொரு கொடுப்பனவுகளும் மேற்கொள்ளப்படவில்லை என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

