Jun 14, 2026 - 01:43 PM -
0
பிரபல நடிகரும், இயக்குனருமான ராகவா லாரன்ஸ் சென்னை உத்தண்டியில் உள்ள அவரது இல்லத்தில் தனது ரசிகர் மன்ற நிர்வாகிகளுடன் மிக முக்கியமான ஆலோசனைக் கூட்டத்தை நடத்தினார்.
ஆலோசனைக் கூட்டத்திற்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த ராகவா லாரன்ஸ், "நான் அரசியலுக்கு வருவது குறித்து எனது ரசிகர்களுடனும், நிர்வாகிகளுடனும் விரிவாக ஆலோசித்துள்ளேன்.
அவர்களின் கருத்துக்களைக் கேட்டறிந்துள்ளேன். புதிய கட்சி தொடங்குவதா அல்லது ஏற்கனவே உள்ள ஒரு கட்சியில் இணைவதா என்பது குறித்த எனது இறுதி முடிவை மிக விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்" என்று கூறினார்.
கடந்த ஒரு மாத காலத்தில் தவெக ஆட்சி சிறப்பாக உள்ளதாகவும், அமைச்சர்கள் ராஜ்மோகன், ரமேஷ் உள்ளிட்டோரின் செயல்பாடுகள் சிறப்பாக உள்ளதாகவும்,கோவில்களுக்கு அருகில் இருந்த டாஸ்மாக் கடைகளை அகற்றியதற்கு வரவேற்பு அளிப்பதாகவும் கூறியுள்ளார்.
"நான் அரசியலுக்கு வர வேண்டுமா? இல்லையா? எனக்கு அந்தத் தகுதி இருக்கிறதா?" என்பதைத் தீர்மானிக்க வேண்டியது மக்கள் தான். மக்கள் 'Yes' என்று சொன்னால் அரசியலுக்கு வருவேன், 'No' என்று சொன்னால் ஒதுங்கிவிடுவேன் என்று கூறியுள்ளார்.
ரஜினிகாந்த் கட்சி தொடங்க இருந்தபோது, தன்னிடம் "நீங்கள் சுகாதாரத்துறை அல்லது கல்வித்துறை அமைச்சர் ஆகலாம்" என்று சிலர் கூறினர். ஆனால், "பதவிகள் எல்லாம் படித்தவர்களுக்குத் தான், நான் அதிகம் படித்தவன் அல்ல, மக்களின் நலனே முக்கியம்" என்று அவர்களுக்குப் பதிலளித்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

