Jun 22, 2026 - 09:37 PM -
0
இலங்கைக்கு வருகை தந்துள்ள அமெரிக்காவின் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலாளர் கலாநிதி Paul Kapur, இன்று (22) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவை சந்தித்தார்.
இலங்கைக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான 77 ஆண்டுகால இருதரப்பு உறவுகள் இதன்போது நினைவு கூரப்பட்டதுடன், இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகள் வர்த்தகம், பாதுகாப்பு, முதலீடு, சுற்றுலா மற்றும் இருதரப்பு மக்கள் தொடர்புகள் போன்ற துறைகளின் ஊடாக சிறந்த பன்முக ஒத்துழைப்பாக வளர்ச்சியடைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து இதன்போது தனது மகிழ்ச்சியை வெளியிட்ட அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர், அந்த ஒத்துழைப்பைத் தொடர்ச்சியாக முன்னோக்கி கொண்டு செல்வதற்கு அர்ப்பணிப்புடன் செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.
மத்திய கிழக்கில் தற்போது நிலவும் சூழ்நிலை சாதகமான திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருப்பது இதன்போது கவனத்தில் கொள்ளப்பட்டதுடன், ஜூன் 19ஆம் திகதி எட்டப்பட்ட அமைதி ஒப்பந்தம் பிராந்தியத்தை நிலையான அமைதியை நோக்கி இட்டுச் செல்லும் என இரு தரப்பினரும் நம்பிக்கை தெரிவித்தனர்.
அந்த சந்தர்ப்பத்தில் இலங்கை பின்பற்றிய மனிதாபிமானக் கொள்கையை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, கடந்த மார்ச் மாதம் இலங்கை கடல் எல்லைக்கு அருகில் விபத்துக்குள்ளான இரு கப்பல்களுக்கு சட்டபூர்வமான அடிப்படையில் மனிதாபிமான உதவிகளை வழங்க நடவடிக்கை எடுத்ததாகக் குறிப்பிட்டார். அதற்காக இலங்கை எடுத்த நடவடிக்கைகளை அமெரிக்க உதவி இராஜாங்கச் செயலாளர் இதன்போது பாராட்டினார்.
அத்துடன், பிராந்தியத்தின் அமைதி மற்றும் ஸ்திரத்தன்மைக்காக இலங்கை தனது அதிகபட்ச ஆதரவை வழங்கும் என்றும் ஜனாதிபதி இதன்போது வலியுறுத்தினார்.
இலங்கையின் ஏற்றுமதியில் தனி நாடாகப் பெரும் பங்கினை அமெரிக்கா கொண்டுள்ள நிலையில், இரு நாடுகளுக்கும் இடையில் நிலவும் வர்த்தக ஒத்துழைப்பை இரு தரப்பினருக்கும் பயனளிக்கும் வகையில் மேம்படுத்துவது குறித்தும், இலங்கைக்கு விதிக்கப்பட்டுள்ள தீர்வை வரிகள் குறித்தும் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது.
இலங்கையைப் போன்ற சிறிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டை, அமெரிக்கா போன்ற பாரிய பொருளாதாரத்தைக் கொண்ட ஒரு நாட்டுடன் ஒப்பிட முடியாது என்றும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக இடைவெளியைக் குறைப்பது கடினமான காரியம் என்றும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, அமெரிக்காவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தின் பணிகளை விரைவில் நிறைவு செய்வது குறித்தும் இரு தரப்பினரதும் கவனம் செலுத்தப்பட்டது.

