Jun 22, 2026 - 10:31 PM -
0
பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில இன்று ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தி, கத்தோலிக்க திருச்சபையின் கொழும்பு மறைமாவட்ட ஊடகப் பேச்சாளர் வணக்கத்திற்குரிய அருட்தந்தை சிறில் காமினியிடம் 10 கேள்விகளை முன்வைத்துள்ளார்.
அருட்தந்தை சிறில் காமினி இக்கேள்விகளுக்குப் பதிலளிப்பதைத் தவிர்த்தால், அவர் நடத்தும் அடுத்தடுத்த ஊடகவியலாளர் சந்திப்புகளில் இக்கேள்விகளை அவரிடம் தொடர்ந்து கேட்குமாறு உதய கம்மன்பில ஊடகவியலாளர்களிடம் கேட்டுக்கொண்டார்.
அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில,
"2018 உள்ளூராட்சி மன்றத் தேர்தலிலும், ஜனாதிபதித் தேர்தலுக்குச் செல்லும் போதும் 56% க்கும் அதிகமான வாக்குச் சதவீதம் இருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலால் உண்மையான பலனைப் பெற்ற ஒருவர் இருக்கிறார்.
கர்தினால் ஆண்டகை 2022 நவம்பர் 15ஆம் திகதி ஓய்வுபெற வேண்டியிருந்தது. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய பலம்பொருந்திய தரப்பினரை சட்டத்தின் முன் நிறுத்துவதற்காக நான் இப்பதவியில் நீடிக்க வேண்டும் என வத்திக்கானுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
கர்தினால் ஆண்டகை 04 சந்தர்ப்பங்களில் சேவை நீடிப்புகளைப் பெற்றுள்ளார். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் உண்மையான பயனாளி கர்தினால் ஆண்டகைதான். அப்படியென்றால், இந்தத் தாக்குதலின் பொறுப்பை கர்தினால் மீது சுமத்தாமல் இருப்பது ஏன்?
2021 ஒக்டோபர் 13 ஆம் திகதி நடைபெற்ற கலந்துரையாடல் ஒன்றின் படி, உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சூத்திரதாரி சலே என்று சிறில் காமினி ஆயர் கூறுகிறார், எந்தச் சாட்சியத்தின் அடிப்படையில் அவர் அதனைக்கூறுகிறார்? உயிர்த்த ஞாயிறு புலனாய்வு விசாரணைகளை நிறுத்துமாறு அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்கும் எதிர்க்கட்சியினர் யார்?
சுரேஷ் சலே தனது தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை (Passwords) குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் வழங்க வேண்டும் என்று நீங்கள் கூறினீர்கள், சந்தேகநபர் ஒருவருக்கு அவ்வாறு கட்டாயப்படுத்துவது சட்டவிரோதமானது என்பதை நீங்கள் அறிவீர்களா?
குற்றப்புலனாய்வுத் திணைக்களம் சலேயை கொடுமையான முறையில் நடத்தியுள்ளதாக நீதிமன்ற மருத்துவ அறிக்கை மற்றும் மனித உரிமைகள் அறிக்கையின் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அந்த கொடுமையான நடாத்துகைகள் குறித்து நாங்கள் குரல் எழுப்பும் போது, நீங்கள் அதனை நியாயப்படுத்தி கருத்துக்களை வெளியிடுவது நியாயமானதா?
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டுக்கு உள்ளானதால், கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கம் ஷானியை பதவியில் இருந்து நீக்கியதை அறிந்திருந்தும், மீண்டும் அவரை அதே பதவியில் அமர்த்துமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையின் ஊடாக, மறுபடி விசாரணைகள் ஒப்படைக்கப்படுவது ஒரு குற்றச்சாட்டுக்குரிய நபரிடம்தான் என்பது தெரிந்திருந்ததா?
ஷானி மற்றும் ரவி ஆகியோருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட வேண்டும் எனப் பரிந்துரைக்கப்பட்டிருந்த நிலையில், அவர்களுக்கே அந்தப் பதவிகளை வழங்குமாறு கட்டாயப்படுத்தியதன் மூலம் மறைக்கப்பட வேண்டியது ஏதேனும் இருந்ததா?
ஒன்றுக்கொன்று முரணான கோரிக்கைகளை விடுத்ததை ஏற்றுக்கொள்கிறீர்களா? அவ்வப்போது சூத்திரதாரிகளை மாற்றுவதற்குப் பலத்த காரணங்கள் என்ன? அபுஹிந்த் தான் சூத்திரதாரி என்ற தகவல்கள் விசாரணைகளுக்கு வழங்கப்பட்டதா?" என்று கேள்வியெழுப்பினார்.

