Jun 23, 2026 - 02:42 PM -
0
நடிகையைக் கடத்தி பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் நடிகர் திலீப் மீது குற்றம்சாட்டப்பட்ட போது அமைக்கப்பட்ட ஹேமா கமிட்டி அறிக்கையில் நடிகைகளுக்கு எதிரான பாலியல் தொல்லைகள் குறித்து விரிவான தகவல்கள் வெளியாகின. இதனைத் தொடர்ந்து மலையாள திரைப்பட நடிகர்கள் சங்கமான ’அம்மா’ அமைப்பில் பிரச்னை ஏற்பட்டது.
இதனால் நடிகர் மோகன்லால் தலைமையிலான நிர்வாகக்குழு ராஜினாமா செய்தனர். அதன்பிறகு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற நடிகர்கள் சங்கத் தேர்தலில் புதிய தலைவராக நடிகை ஸ்வேதா மேனன் தேர்வுசெய்யப்பட்டார். அவர் தற்போது ’அம்மா’ அமைப்பில் ஏற்பட்டுள்ள பிரச்னைகள் காரணமாக பதவியேற்ற 10 மாதங்களில் பதவியிலிருந்து விலகியுள்ளார். அத்துடன் பொதுச் செயலாளர் குக்கூ பரமேஸ்வரன் உள்ளிட்ட 17 பேர் கொண்ட நிர்வாகக்குழுவினரும் பதவியிலிருந்து விலகியுள்ளனர்.
பதவி விலகல் குறித்து ஸ்வேதா மேனன், “நானும் எனது 17 பேர் கொண்ட நிர்வாகக் குழுவும் ஒட்டுமொத்தமாக ராஜினாமா செய்துள்ளோம். திட்டமிட்டே எங்களை வெளியேற்ற சிலர் சதி செய்துள்ளனர். சங்கத்தின் கண்ணியத்தைக் கருதி, இதுவரை அமைதி காத்து வந்தேன். ஆனால், நான் இப்போது ’அம்மா’ சங்கத்தில் இல்லை. எனவே, இனி அனைத்து விஷயங்களையும் ஊடகங்களுக்கு முன்னால் வெளிப்படையாகப் பேசப்போகிறேன்” என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் ஸ்வேதா மேனன்.
சில குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டவர்களிடம் மீண்டும் சங்கத்தின் அதிகாரம் செல்லும் சூழல் உருவாக்கப்படுவதாகவும் சிலர் சங்கத்தின் கட்டுப்பாட்டை மீண்டும் தங்களது கைகளுக்குள் கொண்டு வர முயற்சி செய்வதாகவும், திட்டமிட்ட வகையில் தற்போதைய நிர்வாகத்தை பதவியில் இருந்து அகற்ற முயற்சிகள் நடந்ததாகவும் ஸ்வேதா மேனன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஸ்வேதா மேனன் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் மலையாள திரையுலகில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன. அம்மா சங்கத்தின் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன, புதிய நிர்வாகம் எப்படி அமையும் என்பதில் திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது.
தொடர்ந்து ஏற்பட்டுவரும் உள்கட்டமைப்பு பிரச்சினைகள் காரணமாக, மலையாள நடிகர் சங்கத்தின் எதிர்காலம் மீண்டும் கேள்விக்குறியாகியுள்ளது. இதனால், விரைவில் புதிய தேர்தல் நடத்தப்படுமா என்ற எதிர்பார்ப்பும் உருவாகியுள்ளது.

