Jun 23, 2026 - 05:18 PM -
0
தீவிரமாகப் பரவி வரும் டெங்கு அபாயத்தைக் கட்டுப்படுத்துவதற்காகச் செயல்படுத்தப்படும் தேசியத் திட்டத்திற்கு இணையாக, விசேட டெங்கு ஒழிப்பு கூட்டு நடவடிக்கை ஒன்றைச் செயல்படுத்துவதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது.
'கிளீன் ஸ்ரீலங்கா' செயலகத்தின் வழிகாட்டலில் இந்த நடவடிக்கை ஜூன் 24, 25 மற்றும் 26 ஆகிய மூன்று நாட்களுக்கு நடத்தப்படவுள்ளதுடன், இது தொடர்பான ஊடகத் தெளிவுபடுத்தல் கலந்துரையாடல் இன்று (23) ஜனாதிபதி செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது.
அங்கு கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி செயலாளர், டெங்கு ஒழிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்குப் பொதுமக்களின் விழிப்புணர்வும் பங்களிப்பும் இன்றியமையாதது எனக் குறிப்பிட்டார்.
தற்போது நிலவும் மழைக்கால நிலைமை காரணமாக, கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில் டெங்கு பரவல் அதிகரிக்கும் போக்கு காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இந்த நிலமையைக் கட்டுப்படுத்துவதற்காகக் குறுகிய கால மற்றும் நீண்ட கால தீர்வுகளைக் கொண்ட வேலைத்திட்டமொன்றைத் தயாரிப்பதற்கு அரசாங்கம் எதிர்பார்ப்பதாக ஜனாதிபதி செயலாளர் மேலும் தெரிவித்தார்.
வீட்டு வளாகங்கள் மட்டுமன்றி, அரச நிறுவனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் கட்டுமானப் பணிகள் நடக்கும் இடங்களைச் சூழவும் டெங்கு நுளம்புகள் பெருகும் அபாயம் காணப்படுவதால், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருப்பதில் அனைத்துத் தரப்பினரும் அவதானம் செலுத்த வேண்டும் என இங்கு வலியுறுத்தப்பட்டது.
டெங்கு பரவல், அதன் அபாய நிலை மற்றும் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க இங்கு விளக்கமளித்தார்.
மக்களை விழிப்புணர்வூட்டுவதும், சுற்றுப்புறத்தைத் தூய்மையாக வைத்திருக்க அவர்களை ஊக்குவிப்பதுமே இந்த நேரத்தில் மிக முக்கியமான படியாகும் எனக் குறிப்பிட்ட ஜனாதிபதி செயலாளர், அதற்காக அனைத்து ஊடக நிறுவனங்களினதும் ஆதரவை எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

