Jun 30, 2026 - 10:01 PM -
0
லண்டன் ஓவல் மைதானத்தில் நடைபெற்ற மகளிர் டி20 உலகக் கிண்ண போட்டியின் முதலாவது அரையிறுதி ஆட்டத்தில், அவுஸ்திரேலிய மகளிர் அணி 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்தியத் தீவுகள் மகளிர் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றதுடன், இறுதிப்போட்டிக்கும் தகுதி பெற்றுள்ளது.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய மேற்கிந்தியத் தீவுகள் அணி, அவுஸ்திரேலிய வீராங்கனைகளின் துல்லியமான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது.
அந்த அணியின் தலைவர் ஹெய்லி மேத்யூஸ் 30 ஓட்டங்களும், டிஆண்ட்ரா டாட்டின் 26 ஓட்டங்களும் எடுத்தனர். நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் மேற்கிந்தியத் தீவுகள் அணி 7 விக்கெட் இழப்பிற்கு 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அவுஸ்திரேலிய அணி தரப்பில் சோஃபி மோலினக்ஸ், ஆஷ்லீ கார்ட்னர் மற்றும் ஜார்ஜியா வேர்ஹாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
126 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் களம் இறங்கிய அவுஸ்திரேலிய அணி, ஆரம்பம் முதலே அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. தொடக்க வீராங்கனை பெத் மூனி அதிரடியாக விளையாடி 36 பந்துகளில் 8 நான்கு ஓட்டங்களுடன் 61 ஓட்டங்கள் எடுத்து இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.
அவருக்குப் பக்கபலமாக ஆடிய ஆஷ்லீ கார்ட்னர் 35 ஓட்டங்கள் எடுத்தார். எலிஸ் பெர்ரி 2 ஓட்டங்கள் எடுத்திருந்தபோது காயம் காரணமாக வெளியேறினார் .
இறுதியில், அவுஸ்திரேலிய மகளிர் அணி 13 ஓவர்களிலேயே 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்து 127 ஓட்டங்களைப் பெற்று, 42 பந்துகள் மீதமிருந்த நிலையில் எளிதாக வெற்றி இலக்கை எட்டியது.
இந்த மாபெரும் வெற்றியின் மூலம் அவுஸ்திரேலிய அணி நடப்பு உலகக் கிண்ணத் தொடரின் இறுதிப்போட்டிக்கு கம்பீரமாக முன்னேறியுள்ளது.

