Jul 1, 2026 - 01:24 PM -
0
எல் நினோ மற்றும் லா நினா போன்ற காலநிலை மாற்றங்கள் நாட்டின் நிதிக்கொள்கை, பணக்கொள்கை மற்றும் விவசாயக் கொள்கை ஆகிய மூன்று பிரதான துறைகளில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எச்சரிக்கை விடுத்துள்ளார்.
காலநிலை மாற்றம் பற்றிய பாராளுமன்ற ஒன்றியத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
"மத்திய வங்கி பணக்கொள்கை தொடர்பிலும், திறைசேரி நிதிக்கொள்கை தொடர்பிலும், விவசாய அமைச்சு விவசாயக் கொள்கை தொடர்பிலும் மிகுந்த அவதானத்துடன் செயல்பட வேண்டும். எல் நினோ போன்ற காலநிலை மாற்றங்கள் உலகளாவிய ரீதியில் பாதிப்புகளை ஏற்படுத்தி, மறைமுகமாக இலங்கையின் இறக்குமதி மற்றும் விலையேற்றத்தில் தாக்கத்தைச் செலுத்தும். எனவே, உணவு மற்றும் எரிபொருள் விலையேற்றம் ஏற்பட்டால் நாட்டின் கையிருப்புகளில் ஏற்படும் தாக்கம் குறித்து முன்கூட்டியே மதிப்பீடு செய்ய வேண்டும்" என அவர் சுட்டிக்காட்டினார்.
விவசாயத்துறையின் பங்களிப்பு வீழ்ச்சியடைந்து வரும் நிலையில், மாகாண மற்றும் மத்திய அரசாங்க நிறுவனங்களை ஒன்றிணைத்து தேசிய விவசாயக் கொள்கையொன்றை உருவாக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார். மேலும், மகாவலிப் பிரதேசங்கள், பெரிய நீர்த்தேக்கங்கள் மற்றும் சிறிய குளங்களை ஒருங்கிணைத்து வலுவான 'தேசிய நீர் முகாமைத்துவத் திட்டம்' ஒன்றின் அவசியத்தையும் அவர் எடுத்துரைத்தார்.
பேரிடர் காலங்களில் சர்வதேச நிதி நிறுவனங்களிடமிருந்து உதவிகளைப் பெறும்போது கடைப்பிடிக்க வேண்டிய அணுகுமுறைகள் குறித்து அவர் சில ஆலோசனைகளை வழங்கினார்:
அபிவிருத்தித் திட்டங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிதியை அவசரத் தேவைகளுக்காகப் பயன்படுத்தினால், அந்தத் திட்டங்கள் முடங்கிவிடும். எனவே, அவ்வாறு எடுக்கப்படும் நிதியை மீண்டும் ஈடுசெய்யும் நடைமுறை குறித்து நிதி நிறுவனங்களுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்த வேண்டும்.
பேரிடர் காலங்களில் சர்வதேச நிறுவனங்களிடமிருந்து கடன்களைப் பெறுவதைத் தவிர்த்து, உதவிகளை மட்டுமே கோர வேண்டும்.
பேரிடர்களால் ஏற்படும் மெக்ரோ அளவிலான நிதி இழப்புகளைக் கணக்கிடும்போது, சுற்றாடல் பாதிப்புகள் மற்றும் வனவிலங்குகளுக்கு ஏற்படும் சேதங்களையும் நிதி ரீதியாக மதிப்பிட வேண்டும்.
நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்தவும், காலநிலை மாற்றங்களின் தாக்கத்தைத் தணிக்கவும் இத்தகைய ஒருங்கிணைந்த மற்றும் முற்போக்கான அணுகுமுறைகளே தீர்வினைத் தரும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தனது உரையில் வலியுறுத்தினார்.

