Jul 1, 2026 - 05:13 PM -
0
இந்திய அணியின் வேகப்பந்து வீச்சு ஆல்-ரவுண்டர் ஹர்திக் பாண்ட்யா. ஐ.பி.எல். கிரிக்கெட்டில் இவர் மும்பை இந்தியன்ஸ் அணியில் அறிமுகம் ஆனார். இதில் சிறப்பாக விளையாட இந்திய சீனியர் அணியில் இடம் பிடித்தார்.
மூன்று வடிவிலான கிரிக்கெட்டிலும் விளையாடி வந்தார். அவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டதால், டெஸ்ட் போட்டிகளில் விளையாடுவதை தவிர்த்தார். தற்போது டி20 கிரிக்கெட்டில் மட்டும் கவனம் செலுத்தி வருகிறார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து விலகி குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சென்றார். அந்த அணியில் தலைராக நியமிக்கப்பட்டார். முதல் சீசனிலேயே குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு சாம்பியன் பட்டத்தை வாங்கிக் கொடுத்தார். அடுத்த சீசனில் குஜராத் அணி 2 ஆவது இடம் பிடித்தது.
அதன்பின் மும்பை இந்தியன்ஸ் அணி அவரை அணிக்கு திரும்ப அழைக்க முடிவு செய்தது. அணி தலைவர் பதவி தந்தால் திரும்ப வருகிறேன் என்ற கண்டிசன் வைத்தார். அவரது கண்டிசனை மும்பை இந்தியன்ஸ் ஏற்றுக் கொண்டது.
இதனால் 2025 சீசனில் ரோகித் சர்மா அணி தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு ஹர்திக் பாண்ட்யாவுக்கு அப்பதவி வழங்கப்பட்டது. ஆனால், 2025 சீசனில் மும்பை இந்தியன்ஸ் மோசமான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. வீரர்கள் இடையே ஒற்றுமை இல்லை எனச் செய்திகள் வெளியானது. இந்த வருடம் நடைபெற்ற போட்டியிலும் மும்பை இந்தியன்ஸ் அணியால் ஜொலிக்க முடியாத நிலை ஏற்பட்டது. டிரஸ்ஸிங் அறை வீரர்களுக்கு இடையிலான உரையாடல் வெளியே கசிந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
மும்பை இந்தியன்ஸ் அணியில் தனக்கு போதுமான ஆதரவு இல்லை என்று ஹர்திக் பாண்ட்யா உணர்ந்தார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்து வெளியேற முடிவு செய்தார்.
கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ரகானே தலைமையின் கீழ் சிறப்பாக செயல்படவில்லை. இதனால் அடுத்த சீசனில் ஹர்திக் பாண்ட்யா தலைமையில் அணியை கட்டமைக்கலாம் என கொல்கத்தா அணி திட்டமிட்டுள்ளது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை டிரேடு செய்ய கொல்கத்தா நைட் ரைடர்ஸ் ஆர்வம் காட்டி வருகிறது.
அதேவேளையில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது. அத்துடன் ஆர்சிபி, சன்ரைசர்ஸ் உள்ளிட்ட அணிகளும் ஹர்திக் பாண்ட்யாவை டிரேடு செய்ய விரும்புகின்றன. இந்த நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும் தங்களது ஆர்வத்தை வெளிப்படுத்தியதாக தெரிகிறது. இதனால் ஹர்திக் பாண்ட்யாவை டிரேடு செய்ய கடும் போட்டி நிலவுகிறது.

