Jul 1, 2026 - 11:35 PM -
0
பொசோன் பௌர்ணமி தினத்தன்று (29) மாலபே நகரில் நடைபெற்ற தன்சல் பந்தலுக்கு அருகில் இளைஞர் ஒருவர் மீது அநாகரிகமான முறையில் தாக்குதல் நடத்திய சம்பவத்துடன் தொடர்புடைய ஐந்து சந்தேகநபர்களை மாலபே பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சமூக ஊடகங்களில் பரவலாகப் பகிரப்பட்ட காணொளி ஒன்றை அடிப்படையாகக் கொண்டு, நேற்று (30) பொலிஸாருக்குக் கிடைத்த முறைப்பாட்டிற்கு அமைய மேற்கொள்ளப்பட்ட துரித விசாரணைகளின் பின்னர் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தன்சலில் உண்பதற்காக வரிசையில் நின்றிருந்தவர்களைத் தவிர்த்து, இருவர் வெளியில் இருந்து வரிசையில் நுழைய முயன்றுள்ளதாக பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது வரிசையில் நின்றிருந்த இளைஞர் ஒருவர் அதற்கு எதிர்ப்புத் தெரிவித்ததால் ஆத்திரமடைந்த கும்பல், அந்த இளைஞரை கைகளாலும் கால்களாலும் மற்றும் பாதுகாப்புத் தலைக்கவசங்களாலும் கொடூரமாகத் தாக்கியுள்ளது.
சந்தேகநபர்கள் 16 மற்றும் 17 வயதுடைய, கடுவெல பகுதியில் வசிக்கும் சிறுவர்களாவர்.
கைது செய்யப்பட்ட ஐந்து சந்தேகநபர்களும் இன்று (01) கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டுள்ளனர்.
இச்சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களைக் கைது செய்வதற்காக மாலபே பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
