Jul 2, 2026 - 12:56 PM -
0
SLT‑MOBITEL, வெளி விவகார அமைச்சு, வெளிநாட்டு வேலை வாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சுடன் இணைந்து, Lankakonect மொபைல் அப்ளிகேஷனை உத்தியோகபூர்வமாக அறிமுகம் செய்துள்ளது. இந்த அறிமுக நிகழ்வு அண்மையில் கொழும்பு சினமன் லேக்சைட் ஹோட்டலில் நடைபெற்றது. தேசத்தின் டிஜிட்டல் மாற்றியமைப்பு பயணத்தில் பெருமளவு முக்கியத்துவம் வாய்ந்த அங்கமாக app அமைந்துள்ளது. வெளிநாடுகளில் வாழும் மற்றும் பணிபுரியும் இலங்கை மக்களுக்கான ஒரு குறைதீர்க்கும் முகாமைத்துவ தளமாக தொழிற்படும் Lankakonet app, சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் தங்களின் குறைகளை முன்வைப்பதற்கும் அவற்றை கண்காணிப்பதற்குமான அவர்களின் திறனை இலகுபடுத்துகின்றது.
அமைச்சின் தூதரக விவகாரப் பிரிவு மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) ஆகியவற்றுக்காக SLT-MOBITEL நிறுவனத்தினால் உருவாக்கப்பட்ட இந்த app, உலகெங்கிலும் உள்ள வெளிநாட்டு இலங்கை பிரஜைகளுக்கும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கும் வேலைவாய்ப்பு ஒப்பந்த மீறல்கள், துஷ்பிரயோகங்கள், செலுத்தப்படாத ஊதியங்கள், அன்புக்குரியவர்களின் இருப்பிடம் மற்றும் ஏனைய கவலைக்குரிய விடயங்கள் உள்ளடங்கலாக தாக்கல் செய்யப்படும் புகார்களை சிங்களம், தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளில் பதிவு செய்வதற்கும், சமர்ப்பிப்பதற்கும் மற்றும் கண்காணிப்பதற்குமான ஒரு பாதுகாப்பான தளத்தை வழங்குகின்றது.
இவ்விதிமுறைகளை இணையவழிக்கு மாற்றுவதன் மூலம், Lankakonect app இனால், நீண்ட காத்திருப்பு நேரங்களையும் தேவையற்ற பயணங்களையும் தவிர்ப்பதுடன், எந்தவொரு இடத்திலிருந்தும், எந்தவொரு நேரத்திலும் குறைகளை முன்வைப்பதற்கான வசதியை வழங்குகின்றது. மிகவும் பாதிக்கப்படக்கூடிய நிலையில் உள்ளவர்களில் முதன்மையாகக் கருதப்படும் வீட்டுப் பணியாளர்கள், தங்களின் அவசரமான கவலைக்குரிய விடயங்களை உடனடியாக மேலதிக அதிகாரிகளின் கவனத்திற்குக் கொண்டு செல்ல முடியும்.
முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டவுடன், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் (SLBFE) மற்றும் தூதரக விவகாரப் பிரிவு ஆகியவற்றின் அதிகாரிகள் இணையவழியாக இக்கட்டமைப்பை அணுகி, மனுதாரரின் சார்பில் பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான பணிகளை ஆரம்பிக்க முடியும். ஒவ்வொரு முறைப்பாடும் அதன் முழுமையான சுழற்சி முறைமையினூடாக உடனுக்குடன் கண்காணிக்கப்பட முடியும் என்பதுடன், இது பயனர்களுக்கு நேரடித் புதுப்பித்தல்களை வழங்குவதுடன், முகாமைத்துவத் தரப்பினர் அதன் முன்னேற்றத்தைக் கண்காணிக்கவும் வழிவகுக்கின்றது. மேலும், குறைதீர்க்கும் செயல்முறையின் ஒட்டுமொத்த முன்னேற்றம் குறித்த ஒரு முழுமையான பார்வையை வழங்குவதற்கும் இது அமைச்சுக்கு இடமளிக்கின்றது.
இந்நிகழ்வு, வெளிநாட்டலுவல்கள் அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் பிரதிநிதிகள் ஆகியோரின் பங்கேற்புடன் சிறப்பிக்கப்பட்டது. இத்திட்டத்திற்கு தொழில்நுட்ப பங்காளராக ஆதரவளித்த ஐக்கிய நாடுகள் சபையின் சர்வதேச தொழிலாளர் அமைப்பு (ILO) உள்ளிட்ட சர்வதேச பங்காளர்களும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர். தூதரகத்திற்கு வருகை தரும் புலம்பெயர்ந்தோருக்கான சேவைகளின் வசதியையும் செயல்திறனையும் மேம்படுத்திய குவைத் தூதரகத்தின் அதிநவீன வாடிக்கையாளர் முகாமைத்துவக் கட்டமைப்பின் முந்தைய டிஜிட்டல் முயற்சிகளை அடிப்படையாகக் கொண்டு இத்திட்டம் கட்டியெழுப்பப்பட்டுள்ளது. SLT-MOBITEL நிறுவனத்தின் வலுவூட்டலில் இயங்கும் Lankakonect, உலகெங்கிலும் உள்ள பிரஜைகளுக்கு இந்த கண்டுபிடிப்பை விரிவுபடுத்தும் ஒரு தேசிய தளத்தை நிறுவி, அதற்கு இணையானதொரு டிஜிட்டல் உருமாற்றமாகத் திகழ்கின்றது.
2025 ஆம் ஆண்டில், வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தொழிலாளர்கள் தேசியப் பொருளாதாரத்திற்கு முன்னெப்போதும் இல்லாத வகையில் 8.07 பில்லியன் அமெரிக்க டொலர்களை வெளிநாட்டுப் பண அனுப்பல்களாக பங்களிப்புச் செய்துள்ளனர். இது குடும்பங்களை வாழ்விப்பதிலும், சமூகங்களை வலுப்படுத்துவதிலும் மற்றும் நாட்டின் வளர்ச்சியை ஊக்குவிப்பதிலும் அவர்கள் வகிக்கும் முக்கிய பங்கை வெளிப்படுத்துகின்றது. இந்த app, அவர்களின் பங்களிப்புகளைக் கௌரவிப்பதற்கும், அவர்கள் உலகின் எந்தப் பகுதியில் இருந்தாலும் தங்களின் தாய்நாட்டுடன் இணைந்திருப்பதை உறுதி செய்வதற்கும் வடிவமைக்கப்பட்டுள்ளது.
Lankakonect செயலியின் ஊடாக, தொழில்நுட்பமானது மக்களின் சேவைக்கான முன்னேற்றத்தைக் குறிக்கும் ஒரு முழுமையான டிஜிட்டல் மயமாக்கப்பட்ட இலங்கை என்ற அரசாங்கத்தின் தொலைநோக்கு பார்வைக்கான தனது அர்ப்பணிப்பை SLT-MOBITEL நிறுவனம் மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
வெளிவிவகார அமைச்சில் நடைபெற்ற இந்த அங்குரார்ப்பணம், வெளிநாடுகளிலுள்ள தூதரகப் பணிகளின் சேவைகளை இணையவழிக்கு கொண்டு வருவதற்கான இலங்கையின் பரந்தளவிலான உந்துதலைப் புலப்படுத்துவதுடன், தூதரகங்களுக்கும் புலம்பெயர்ந்த சமூகங்களுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்துகின்றது. அத்துடன் வெளிநாட்டில் வாழும் ஒவ்வொரு இலங்கை பிரஜைக்குமான தேசிய அடையாளம் மற்றும் தாய்நாட்டுடனான பிணைப்பை மேலும் உறுதிப்படுத்துகின்றது.

