Jul 2, 2026 - 05:14 PM -
0
அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலே, தனது மடிக்கணினி (Laptop) மற்றும் கையடக்கத் தொலைபேசியின் கடவுச்சொற்களை (Passwords) வழங்குமாறு நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை மதிப்பதாகத் தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில, எனினும் அவற்றை வழங்காமல் இருப்பதற்காக அவரது சட்டத்தரணிகள் மேன்முறையீடு செய்வார்கள் என எதிர்பார்ப்பதாகக் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், தமக்கு எதிராக மேற்கொள்ளப்படும் விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு சந்தேக நபர் ஒருவரை வற்புறுத்துவதற்கு நீதிமன்றத்திற்குக்கூட உரிமையில்லை என்பது ஒட்டுமொத்த உலகமும் ஏற்றுக்கொண்ட ஒரு கோட்பாடாகும் எனக் கூறினார்.
இந்தக் கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு நான்கு நியாயமான காரணங்கள் உள்ளதாக உதய கம்மன்பில இங்கு சுட்டிக்காட்டினார்.
குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின்படி, சந்தேக நபர் ஒருவர் தமக்கு எதிராக நடத்தப்படும் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டிய எந்தவொரு சட்டக் கடப்பாடும் இல்லை என்பது முதலாவது காரணம் என அவர் குறிப்பிட்டார்.
சட்டத்தின்படி கடவுச்சொற்களை வழங்குமாறு எவருக்கும் அழுத்தம் கொடுக்கவோ அல்லது பலவந்தப்படுத்தவோ முடியாது என்றும், அது ஒரு முறையற்ற செல்வாக்குச் செலுத்தல் ஆகும் என்றும் உதய கம்மன்பில இரண்டாவது காரணியாகத் தெரிவித்தார்.
தற்போது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சிறில் காமினி அருட்தந்தை உள்ளிட்ட தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்கள் வாயிலாக அத்தகைய முறையற்ற அழுத்தங்களை பிரயோகித்து வருவதாகவும் அவர் வலியுறுத்தினார்.
குறித்த கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியில் புலனாய்வுத் தகவல் வழங்குநர்கள் பற்றிய அதிமுக்கியமான மற்றும் உணர்திறன்மிக்க தகவல்கள் உள்ளடக்கப்பட்டுள்ளமை மூன்றாவது காரணம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு புலனாய்வு அதிகாரி ஓய்வு பெற்றாலும், தகவல் வழங்குநர்களின் அடையாளம் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே இருக்கும் என்றும் அவர் கூறினார்.
இறுதிக் காரணமாக கம்மன்பில சுட்டிக்காட்டியதாவது, கடந்த காலத்தில் புலனாய்வுத் தகவல்கள் இரகசியப் பொலிஸாரின் (CID) கைக்குச் சென்றதால் ஏற்பட்ட அழிவுகள் குறித்த கசப்பான அனுபவங்கள் வரலாறு நெடுகிலும் காணப்படுகின்றன. 2002ஆம் ஆண்டு இடம்பெற்ற 'மிலேனியம் சிட்டி' காட்டிக்கொடுப்பு இதற்குச் சிறந்த உதாரணமாகும், இதன் மூலம் நாட்டின் புலனாய்வுப் பிரிவு கட்டமைப்பு முற்றிலும் முடக்கப்பட்டது என்றார்.
இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு, நீதிமன்ற உத்தரவை மதிக்கும் அதேவேளை, அதனுடன் உடன்படாததன் அடிப்படையில் சுரேஷ் சலேவின் சட்டத்தரணிகள் இந்த உத்தரவுக்கு எதிராக எதிர்காலத்தில் மேன்முறையீடு செய்வார்கள் எனத் தான் நம்புவதாக உதய கம்மன்பில மேலும் தெரிவித்தார்.
அங்கு தொடர்ந்து கருத்துத் தெரிவித்த பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவர் உதய கம்மன்பில,
"நேற்றைய தினம் கோட்டை நீதவான், சுரேஷ் சலேவிடம் அவரது கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியின் கடவுச்சொற்களை இரகசியப் பொலிஸாரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டுள்ளார். நாம் அந்த நீதிமன்ற உத்தரவை மதிக்கிறோம். ஆனால் அந்த உத்தரவுடன் உடன்படவில்லை. ஏனெனில் தமக்கு எதிரான விசாரணைக்கு சந்தேக நபர்களை ஒத்துழைக்குமாறு வற்புறுத்த நீதிமன்றத்திற்குக்கூட அதிகாரம் இல்லை என்பது உலகளாவிய ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கோட்பாடாகும்.
இங்கு, சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை பொலிஸாரிடம் வழங்காமல் இருப்பதற்கு நான்கு நியாயமான காரணங்கள் உள்ளன. முதலாவது காரணம், குற்றவியல் நடைமுறைச் சட்டக்கோவையின்படி, சந்தேக நபர் ஒருவர் தமக்கு எதிரான விசாரணைக்கு உதவ எவ்விதத்திலும் கட்டுப்பட்டவர் அல்ல.
இரண்டாவது காரணம், கடவுச்சொல்லை வழங்குமாறு எவரேனும் சுரேஷ் சலேவுக்கு அழுத்தம் கொடுத்தாலோ அல்லது பலவந்தப்படுத்தினாலோ, அவ்வாறு செய்ய முடியாது. அது முறையற்ற அழுத்தமாகும். தற்போது அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சிறில் காமினி அருட்தந்தை உள்ளிட்ட மாலிமாவின் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலர் ஊடகங்கள் மூலம் அந்த முறையற்ற அழுத்தத்தை கொடுத்து வருகின்றனர்.
அதேபோல், கடவுச்சொற்களை வழங்காததற்கான மூன்றாவது காரணம், இந்தக் கையடக்கத் தொலைபேசி மற்றும் கணினியில் தகவல் வழங்குநர்கள் பற்றிய உணர்திறன்மிக்க தகவல்கள் இருக்கின்றமையாகும்.
அவர் இப்போது ஓய்வுபெற்று விட்டதால் ஓய்வுபெறும்போது புலனாய்வுத் தகவல்களை நிறுவனத்திடம் ஒப்படைத்துவிட்டு வரவேண்டும் என்று சிறில் காமினி அருட்தந்தை கூறுவதை நான் பார்த்தேன். அது அவர்களின் அரைகுறை அறிவைக் காட்டுகிறது.
புலனாய்வுத் தகவல்கள் ஒப்படைக்கப்பட வேண்டும் தான். ஆனால் புலனாய்வுத் தகவல்களை வழங்கிய தகவல் தருநர்கள் பற்றிய விபரங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரியிடம் மட்டுமே இருக்கும்.
அவை வெளிப்படுவது மிகவும் ஆபத்தானது. தனது உயிரைப் பணயம் வைத்து சாலே இந்த கடவுச்சொல்லைப் பாதுகாப்பதற்கான நான்காவது காரணம் மிகவும் முக்கியமானது. அதாவது, இதற்கு முன்னர் புலனாய்வுத் தகவல்கள் இரகசியப் பொலிஸாரின் கைக்குச் சென்றதால் பெரும் பேரழிவுகள் ஏற்பட்ட கசப்பான அனுபவங்கள் நமது வரலாற்றில் எழுதப்பட்டுள்ளன.
அதில் சமூகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய விடயம் 2002 இல் நடந்த மிலேனியம் சிட்டி காட்டிக்கொடுப்பு ஆகும். அந்தப் பெரும் காட்டிக்கொடுப்புக்குப் பிறகு நமது புலனாய்வுப் பிரிவுகள் சிதறடிக்கப்பட்டன.
எனவே, இத்தகைய துரதிர்ஷ்டவசமான சூழ்நிலையில், இந்த காரணங்களின் அடிப்படையில் சுரேஷ் சலே தனது கடவுச்சொற்களை வழங்காமல் இருப்பதற்கு நியாயமான காரணங்கள் இருப்பதாகவே நாம் நம்புகிறோம்.
இவ்விடயத்தில் நீதிமன்றத் தீர்ப்பை மதிக்கும் அதேவேளை, அதனுடன் உடன்படாததால் சலேவின் சட்டத்தரணிகள் இந்த உத்தரவுக்கு எதிராக மேன்முறையீடு செய்ய நடவடிக்கை எடுப்பார்கள் என்று நான் நினைக்கிறேன்" என்றார்.

