Jul 2, 2026 - 08:25 PM -
0
திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் உள்ளிட்ட 6 மனிதப் படுகொலைகள் தொடர்பாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரும், முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினருமான ‘இனியபாரதி’ என அழைக்கப்படும் கே. புஷ்பகுமாரை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற நீதவான் இன்று (02) உத்தரவிட்டார்.
கடந்த 2007ஆம் ஆண்டு ஜூன் 28ஆம் திகதி, திருக்கோவில் பிரதேச சபையின் முன்னாள் தவிசாளர் உதயகுமார் விநாயகபுரத்தில் உள்ள தனது வீட்டில் இருந்து திருக்கோவில் பிரதேச சபையை நோக்கிப் பயணித்த போது, விநாயகபுரம் - கோரக்களப்பு வீதியில் வைத்து இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுக் கொலை செய்யப்பட்டார்.
இச்சம்பவம் தொடர்பாக அவரது மனைவி, படுகொலை செய்யப்பட்ட தனது கணவருக்கு நீதி கோரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தார். எனினும், இந்த விசாரணை கடந்த கால அரசாங்கங்களினால் கிடப்பில் போடப்பட்டிருந்தது.
இதனைத் தொடர்ந்து, இந்த படுகொலைச் சம்பவம் குறித்து உதயகுமாரின் மனைவி கடந்த 2025ஆம் ஆண்டு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் (CID) மீண்டும் முறைப்பாடு செய்தார்.
அதற்கமைய விசாரணைகளை மேற்கொண்ட சி.ஐ.டி.யினர், இக்கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் அம்பாறை மாவட்டப் பொறுப்பாளரான இனியபாரதி என்ற கே. புஷ்பகுமாரை கடந்த 2025 ஜூலை 6ஆம் திகதி திருக்கோவிலும், அவரது சகாவான சசிதரன் தவசீலனை மட்டக்களப்பு - சந்திவெளியிலும் வைத்து கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட இவர்களை சி.ஐ.டி.யினர் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் வைத்து விசாரணைகளை மேற்கொண்டதில், 2005 தொடக்கம் 2009 வரையிலான காலப்பகுதியில் அம்பாறை, திருக்கோவில் ஆகிய பகுதிகளை மையமாகக் கொண்டு, திருக்கோவில் பிரதேச சபை தவிசாளர் உதயகுமார் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் உட்பட 6 மனிதப் படுகொலைகளுடன் இவர்களுக்குத் தொடர்பிருப்பது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, ஒரு வருட காலமாகப் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர்களுக்கு எதிராக, சி.ஐ.டி.யினர் அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றில் இன்று வியாழக்கிழமை (02) முன்நகர்வுப் பத்திரம் ஊடாக வழக்குத் தாக்கல் செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர்.
இந்த வழக்கை நீதவான் விசாரணைக்கு எடுத்துக் கொண்டபோது, இவர்களைப் பயங்கரவாதத் தடைச் சட்டக் காவலில் இருந்து விடுவித்துள்ளதாக சி.ஐ.டி.யினர் நீதிமன்றத்திற்கு அறிவித்தனர். அதனைத் தொடர்ந்தே, நீதவான் இவர்களை எதிர்வரும் 8ஆம் திகதி வரை மட்டக்களப்பு சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.
இதேவேளை, கடந்த 2005 தொடக்கம் 2009 வரையான காலப்பகுதியில் திருக்கோவில் மற்றும் விநாயகபுரம் பகுதிகளில் பலர் கடத்தப்பட்டுக் காணாமல் போன சம்பவங்கள் தொடர்பாக, காணாமல் போனவர்களின் உறவினர்கள் இனியபாரதி மீது குற்றம் சாட்டி வருவதுடன், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தாக்கல் செய்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
--

