Header Logo
Mogo Academy

வணிகம்
ருமஸ்ஸல இயற்கை கள மையம் தொடர்பில் மத்திய சூழல் அதிகாரசபையுடன் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை நீண்ட காலப் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது

Jul 15, 2026 - 12:25 PM -

0

 ருமஸ்ஸல இயற்கை கள மையம் தொடர்பில் மத்திய சூழல் அதிகாரசபையுடன் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை நீண்ட காலப் பங்காண்மையை ஏற்படுத்தியுள்ளது
Mobitel inner

ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை (JKF) மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபை ஆகியவற்றுக்கிடையே பொது-தனியார் பங்காண்மையாக 2008 மே 1ஆம் திகதி ஏற்படுத்தப்பட்ட ருமஸ்ஸல இயற்கை கள மையத்தின் புனரமைப்புப் பணிகள் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் மேற்பார்வையின் கீழ் முன்னெடுக்கப்பட்டு, மத்திய சுற்றாடல் அதிகார சபையிடம் 2026 ஜுலை 8 ஆம் திகதி கையளிக்கப்பட்டது. 

இந்நிகழ்வில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தவிசாளர், மத்திய சுற்றாடல் அதிகாரசபை – தென் மாகாண உதவிப் பணிப்பாளர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், ஜோன் கீல்ஸ் குழுமத்தின் உடைமை மற்றும் சுற்றுலா/ ஓய்வு பிரிவுகளின் தலைவர் நயன மாவில்மட, சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் பிரதம நிறைவேற்று அதிகாரி ஹிஷான் சிங்ஹவன்சா, ஜோன் கீல்ஸ் குழுமத்தின் பிரதம மக்கள் அதிகாரி இசுரு குணசேகர, சமூக பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான குழும தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய மற்றும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளை மற்றும் சினமன் ஹோட்டல்ஸ் அன்ட் ரிசோர்ட்ஸ் ஆகியவற்றை பிரதிநிதித்துவப்படுத்தி அதிகாரிகளும் கலந்து கொண்டனர். 

கடந்த 18 வருடங்களில், காட்சியமைப்புகளைக் கொண்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ருமஸ்ஸல மலைக்குன்றுப் பகுதியில் அமைந்துள்ள இந்த நிலையம், அனுபவசார் பயிலல் நிலையமாக இயங்கி, 23,480க்கும் அதிகமான பாடசாலை மாணவர்கள், அரசாங்க அதிகாரிகள் மற்றும் சமூக அங்கத்தவர்கள் என பலரையும் வரவேற்றிருந்தது. இலங்கையில் காணப்படும் தனது முன்னணி இயற்கை கள நிலையமாக மத்திய சூழல் அதிகாரசபையின் அங்கீகாரத்தைப் பெற்றுள்ள இந்த மேம்படுத்தப்பட்ட நிலையம், பாடசாலை மாணவர்கள் மற்றும் வயது வந்தவர்கள் மத்தியில் சூழல்சார் கல்வி அறிவூட்டல் மற்றும் உயிரியல் பரம்பல் விழிப்புணர்வு வழங்கும் தனது திறனை மேம்படுத்தி வழங்கவுள்ளதுடன், நிலையத்தின் சுய நிலைபேறாண்மையையும் மேம்படுத்தியுள்ளது. 

மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தவிசாளர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் தமது உரையில் குறிப்பிடுகையில், “புனரமைக்கப்பட்ட ருமஸ்ஸல இயற்கை கள நிலையத்தின் கையளிப்பு விழாவில் கலந்துகொள்வதில் பெரும் மகிழ்ச்சி அடைகின்றேன். இந்த நிலையம் 2008 ஆம் ஆண்டில் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நிதி உதவியுடன் நிறுவப்பட்டது. இது மீண்டும் புனரமைக்கப்பட்டு, மத்திய சுற்றாடல் அதிகாரசபையிடம் கையளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையம் எதிர்கால சந்ததியினரிடையே சுற்றாடல் மீதான ஆழமான மரியாதையை வளர்த்து, பாடசாலை மாணவர்களிடையே அனுபவ ரீதியான கற்றல் மற்றும் நேர்மறையான அணுகுமுறை வளர்ச்சிக்கான ஒரு மூலாராதாரமாகத் தொடர்ந்து சேவை செய்யும். 

எதிர்காலத்தை நோக்குகையில், மத்திய சுற்றாடல் அதிகாரசபை, இந்நிலையத்தை சுயசார்பு கொண்ட ஒரு மாதிரியாக மாற்றுவதற்குத் திட்டமிட்டுள்ளதுடன், அதன் நீண்ட கால தாக்கத்தையும் பின்னடைவுத் திறனையும் உறுதி செய்கின்றது. சுற்றாடல் குறித்து மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படும் ஒரு சமூகத்தை உருவாக்குவது எமது இறுதி நோக்கமாகும். சுற்றாடலைப் பாதுகாப்பது என்பது எதிர்காலத்தைப் பாதுகாப்பதாகும்!” என்றார். 

இந்த புனரமைப்புத் திட்டமானது, இயற்கை வளங்கள், வாழ்விடங்கள் மற்றும் வனவிலங்குகளைப் பாதுகாப்பதன் மூலமும், மேம்படுத்துவதன் மூலமும், அனைத்து மக்களின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துவதற்கான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் உயிரியல் பரம்பல் பாதுகாப்பு அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அத்துடன், சுற்றாடல் பாதுகாப்பு மற்றும் உயிரியல் பரம்பல் குறித்த விழிப்புணர்வை நிலையான முறையில் மேம்படுத்துவதில், பொது-தனியார் கூட்டுறவின் முக்கியத்துவத்தையும் இது வெளிப்படுத்துகின்றது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் சமூகப் பொறுப்புணர்வு செயற்பாடுகளுக்கான தலைமை அதிகாரி கார்மலின் ஜயசூரிய கருத்துத் தெரிவிக்கையில், “உயிரியல் பரம்பல் பாதுகாப்பில் ஜோன் கீல்ஸ் நிறுவனத்தின் அர்ப்பணிப்பின் முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லை குறிப்பிட்டுள்ளது. 

ருமஸ்ஸல இயற்கை கள நிலையம், அனுபவ ரீதியான கற்றலுக்கான ஒரு முன்மாதிரியாக நீண்டகாலமாக திகழ்கின்றது. அண்மையில் மேற்கொள்ளப்பட்ட விரிவான புனரமைப்புகளின் மூலம், இந்நிலையத்தின் கொள்ளளவையும் நிலையான தன்மையையும் நாம் மேலும் வலுப்படுத்தியுள்ளோம். பல்வேறு கள சவால்களுக்கு மத்தியிலும், கடந்த பல வருடங்களாக ஆயிரக்கணக்கான பாடசாலை மாணவர்களினதும் அதிகாரிகளினதும் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வரும் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பரந்த முயற்சிகளை நாம் பெரிதும் வரவேற்கின்றோம். இத்திட்டச் செயற்பாட்டில் Cinnamon Nature Trails, Cinnamon Hotel Engineering மற்றும் Cinnamon by Hikka Tranz ஆகிய பரந்த பங்குதாரர்களின் ஆதரவையும், ஆரம்பக்கட்ட வடிவமைப்பு, கட்டுமானம் மற்றும் இந்த அண்மைக்கால புனரமைப்புப் பணிகளில் மொறட்டுவ பல்கலைக்கழகத்தின் கட்டிடக்கலைப் பிரிவு வழங்கிய பெறுமதிமிக்க ஆலோசனைச் சேவைகளையும் நாம் நன்றியுடன் நினைவுகூர்கின்றோம். இந்நிலையம் வரவிருக்கும் ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கும் சமூக உறுப்பினர்களுக்கும் தொடர்ந்து ஊக்கமளிப்பதைக் காண நாங்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதுடன், இந்த வசதியை மிகவும் சுயசார்பு கொண்டதாக மேம்படுத்துவதில் எமது முழுமையான ஒத்துழைப்பையும் உறுதிப்படுத்துகின்றோம்.” என்றார். 

மீள்திறப்பு விழாவில், நினைவுப் பலகை திரைநீக்கம் செய்யப்பட்டமை, ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையினால் தயாரிக்கப்பட்ட ருமஸ்ஸல பற்றிய ஆவணப்படம், மத்திய சுற்றாடல் அதிகாரசபையினால் முன்வைக்கப்பட்ட எதிர்காலச் செயற்பாட்டுத் திட்டம் மற்றும் மத்திய சுற்றாடல் அதிகாரசபைக்கும் ஜோன் கீல்ஸ் அறக்கட்டளைக்கும் இடையிலான முறையான கையளிப்பு ஆவணப் பரிமாற்றம் ஆகிய நிகழ்வுகள் உள்ளடங்கியிருந்தன. இந்நிகழ்வைத் தொடர்ந்து, அங்கிருந்த வசதிகளைப் பார்வையிடுவதற்கான வழிகாட்டப்பட்ட சுற்றுப்பயணம் ஒன்று இடம்பெற்றதுடன், இது மேம்படுத்தப்பட்ட நிலையத்தை நேரில் அவதானிப்பதற்கும், தரப்பினர்களுக்கு இடையிலான தற்போதைய மற்றும் எதிர்கால கூட்டுறவுகள் குறித்து கலந்துரையாடுவதற்கும் பங்கேற்பாளர்களுக்கு ஒரு சிறந்த வாய்ப்பை வழங்கியது. 

கல்வி, சமூகம் மற்றும் வாழ்வாதாரங்கள், சமூக ஆரோக்கியம் மற்றும் நல்லிணக்கம், அத்துடன் உயிரியல் பரம்பல் ஆகியன, கொழும்பு பங்குச்சந்தையில் சந்தை மூலதனமாக்கலின் அடிப்படையில் பட்டியலிடப்பட்டுள்ள மிகப்பெரிய நிறுவனமான ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சி இன் சமூகப் பொறுப்புணர்வு பிரிவான ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் நான்கு முக்கிய கவனக் குவியப் பகுதிகளாகும். JKH நிறுவனம் 7 பல்வேறுபட்ட தொழிற்துறைகளில் 80 க்கும் மேற்பட்ட நிறுவனங்களை இயக்கி வருகின்றது. 150 வருடங்களுக்கும் மேலான வரலாற்றைக் கொண்டுள்ள ஜோன் கீல்ஸ் குரூப், 18,000 க்கும் மேற்பட்ட நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கியுள்ளதுடன், LMD சஞ்சிகையினால் கடந்த 20 வருடங்களாக இலங்கையின் மிகவும் மதிக்கப்படும் நிறுவனம் எனத் தரப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரான்ஸ்பேரன்சி இன்டர்நஷனல் ஸ்ரீலங்கா அமைப்பின் கூட்டாண்மை அறிக்கைப்படுத்தலில் வெளிப்படைத்தன்மை மதிப்பீட்டில் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் தொடர்ச்சியாக நான்காவது ஆண்டாகவும் முதலிடத்தைப் பெற்றுள்ளது. 

உலகப் பொருளாதார மன்றத்தின் முழுநேர உறுப்பினராகவும், ஐநா உலகளாவிய ஒப்பந்தத்தின் பங்கேற்பாளராகவும் விளங்கும் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ், நாளைக்கான தேசத்திற்கு வலுவூட்டல் (Empowering the Nation for Tomorrow) என்ற தனது சமூகப் பொறுப்புணர்வுத் திட்ட தொலைநோக்குப் பார்வையை ஜோன் கீல்ஸ் அறக்கட்டளையின் மூலமாகவும், இலங்கையில் பிளாஸ்டிக் மாசடைவைக் கணிசமாகக் குறைப்பதில் ஒரு வினையூக்கியாகச் செயற்படும் Plasticcycle என்ற சமூக தொழில்முனைவோர் முன்முயற்சியின் மூலமாகவும் முன்னெடுக்கிறது.


MOST READ

காணொளி
கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கதிர்காமத்தை வந்தடைந்த பாதயாத்திரை பக்தர்கள்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

கிளிநொச்சியில் நெல் கொள்வனவு ஆரம்பம்!

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

பழைய கதைகள் எடுபடாததால் புதிய நாடகம்

லிந்துலையில் சோகம்!

லிந்துலையில் சோகம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

நாங்கள் மக்களுடன் கூட்டணியில் இருக்கிறோம்!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

வீதியோரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளுக்குள் புகுந்த பாம்பு!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

இது தேர்தலுக்கான கூட்டணி இல்லை!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

ஒன்றிணைந்த ஆறு தமிழ் பேசும் கட்சிகள்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

சவால்களுக்கு முடிவு கட்ட வேண்டும்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

நுவரெலியாவில் கடும் பனிமூட்டம்!

Mobitel Upahara