Jul 15, 2026 - 01:32 PM -
0
மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவற்றுடன் இணைந்து இப்போட்டி நடத்தப்பட்டது.
உலக சுற்றாடல் தினத்தைக் கொண்டாடும் வகையில், 'பொறுப்புடன் கழிவுகளை நிர்வகிப்பதன் மூலம் காலநிலை மாற்றத்தின் விளைவுகளைக் குறைக்கப் பங்களிப்போம்' என்ற கருப்பொருளின் கீழ், அகில இலங்கை குறும்படப் போட்டி அண்மையில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
மத்திய சுற்றாடல் அதிகாரசபை மற்றும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு ஆகியவை இணைந்து இப்போட்டியை ஏற்பாடு செய்திருந்தன. இலங்கையிலுள்ள இளம் தலைமுறையிடையே பொறுப்புடன் கழிவுகளை அகற்றல் குறித்த நேர்மறையான நடத்தை மாற்றத்தை ஊக்குவிக்கும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் பல்வேறுபட்ட முயற்சிகளின் ஒரு பகுதியாக இப்போட்டி நடத்தப்பட்டது.
வெற்றியாளர்களைக் கௌரவிக்கும் மற்றும் பரிசுகளை வழங்கும் நிகழ்வு 2026 ஜூன் 25 அன்று மத்திய சுற்றாடல் அதிகாரசபையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சுற்றாடல் பிரதி அமைச்சர் கௌரவ அன்டன் ஜயக்கொடி, மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம், கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் விவசாயம் மற்றும் சுற்றாடல் பிரிவுக்கான கல்விப் பிரதிப் பணிப்பாளர் திருமதி ஆஷா டி சில்வா மற்றும் நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நிறுவன விவகாரங்கள் மற்றும் தொடர்பாடல்களுக்கான பணிப்பாளர் ருவான் வெலிக்கல ஆகியோர் கலந்துகொண்டனர்.
'பாடசாலை மட்ட மற்றும் பகிரங்க பிரிவுகளின் கீழ் ஒரு குறும்படப் போட்டி நடத்தப்பட்டது. சுற்றுச்சூழல் குறித்த விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்துவதற்கான ஒரு சிறந்த முயற்சியாக இதனைப் பார்க்கலாம். நமது சுற்றுப்புறத்தைப் பாதுகாப்பதற்கும், வருங்கால சந்ததியினருக்காகச் சுற்றுச்சூழலைப் பேணிக்காப்பதற்கும் அனைவரிடமும் நேர்மறையான மனப்பான்மையை உருவாக்க, இத்தகைய அறிவுப் பகிர்வுத் திட்டங்கள் மிகவும் முக்கியமானவை மற்றும் பயனுள்ளவை,' என்று கௌரவ சுற்றுச்சூழல் பிரதி அமைச்சர் அன்டன் ஜெயக்கொடி அவர்கள் கருத்துத் தெரிவித்தார்.
மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் தலைவர் பேராசிரியர் திலக் ஹேவாவசம் அவர்கள் தனது கருத்துக்களைப் பகிர்ந்துகொள்கையில், 'காலநிலை மாற்றத்திற்கு எதிரான நடவடிக்கைகள் மிக அவசியமாகக் காணப்படுகின்ற ஒரு காலகட்டத்தில், அதற்கேற்றவாறு இலங்கையில் இளம் தலைமுறையினரை ஈடுபடுத்தவும் அவர்களை வலுப்படுத்தவும் இந்த முயற்சி ஒரு சக்திவாய்ந்த தளமாக அமைகிறது. அவர்களின் படைப்பாற்றலைச் சரியான திசையில் கொண்டு செல்வதன் மூலம், பொறுப்பான முறையில் கழிவுகளை அகற்றுவது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல், நிலைபேற்றியல் கொண்ட வாழ்வியலை மதிக்கும் ஒரு தலைமுறையையும் நாங்கள் உருவாக்குகிறோம். இந்தச் சிறப்பான முயற்சியில் நெஸ்லே லங்கா நிறுவனத்துடன் இணைந்து செயல்படுவதில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம்.'
'பொறுப்புடன் கழிவகற்றல் என்பது, சிறு வயதிலிருந்தே நேர்மறையான பழக்கங்களை வளர்ப்பதோடு, கழிவுகளை தரம் பிரித்தல் மற்றும் சேகரிப்பு முறைகளை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வகிக்கிறது. இள் தலைமுறையினர் தமது படைப்பாற்றலை வெளிப்படுத்த ஒரு தளத்தை வழங்கியதோடு, பொறுப்புடன் கழிவை நிர்வகிப்பது தொடர்பான பரந்த விழிப்புணர்வையும், தேவையான செயல்பாட்டையும் ஊக்குவித்துள்ள அகில இலங்கை குறும்படப் போட்டியை ஏற்பாடு செய்ய ஆதரவளித்ததில் நாங்கள் பெருமகிழ்ச்சி அடைகிறோம். இலங்கையில் நெஸ்லே லங்கா நிறுவனம் தனது 120 ஆண்டுகால செயல்பாடுகளைக் கொண்டாடும் இவ்வேளையில், இது போன்ற முன்னெடுப்புகள், சமூகங்களுக்குப் பகிரப்பட்ட மதிப்பை உருவாக்குவதற்கும், விழிப்புணர்வு மற்றும் அறிவூட்டல் மூலம் சுழற்சிப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதற்கும் எங்களது தொடர்ச்சியான அர்ப்பணிப்பைப் பிரதிபலிக்கின்றன. போட்டியாளர்கள் வெளிப்படுத்திய ஆர்வமும் படைப்பாற்றலும், இலங்கைக்கு ஒரு பசுமையான, தூய்மையான மற்றும் நிலைபேற்றியல் கொண்ட எதிர்காலத்தை உருவாக்குவதில் அடுத்த தலைமுறையினர் பங்களிக்கும் திறன் மீது எங்களுக்கு நம்பிக்கையை அளிக்கிறது. போட்டியில் பங்கேற்றவர்கள் மற்றும் வெற்றியாளர்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,' என்று நெஸ்லே லங்கா நிறுவனத்தின் நிறுவன விவகாரங்கள் மற்றும் தகவல் தொடர்பாடல்களுக்கான பணிப்பாளர் திரு. ருவான் வெலிக்கல அவர்கள் கூறினார்.
போட்டிக்கு கிடைக்கப்பெற்ற நுழைவுகள் அனைத்தும் களனிப் பல்கலைக்கழகம், மானுடவியல் பீடத்தின் துறைத் தலைவரும் சிரேஷ்ட பேராசிரியருமான பேராசிரியர் பற்றிக் ரத்நாயக்க, சிரேஷ்ட சுற்றுச்சூழல் ஊடகவியலாளர் திரு. அனுராத தேவப்பிரிய, மற்றும் சிரேஷ்ட புகைப்படக்கலைஞர் திரு. மகேஷ் சத்துரங்க உள்ளிட்ட மதிப்பிற்குரிய நடுவர் குழுவால் மதிப்பீடு செய்யப்பட்டன.
போட்டியின் வெற்றியாளர்கள் பின்வருமாறு:
1ம் இடம் (பாடசாலை - தனிநபர் பிரிவு) - பினாதி ஜிஹனசா பஸ்நாயக்க, தெலிஜ்ஜாவில மத்திய கல்லூரி
2ம் இடம் (பாடசாலை - தனிநபர் பிரிவு) - யு.ஜே. சயுனி தருமிந்தி, தெலிஜ்ஜவில மத்திய கல்லூரி
3ம் இடம் (பாடசாலைக் குழுப் பிரிவு) - தெலிஜ்ஜாவில மத்திய கல்லூரி - ஜே.வி. குலன்சா சனுலி, கே.எம். தேனுகி தெஹஸ்னா, டபிள்யூ.பீ. தெனுரி திமாஷா, தனுஷா துல்மினா, எம்.கே. நதிஜா தாஷன்
'இன்றைய மற்றும் வருங்கால சந்ததியினரின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த உணவின் ஆற்றலைப் பயன்படுத்துதல்' என்ற நோக்கத்துடன், நெஸ்லே லங்கா நிறுவனம் கடந்த 120 ஆண்டுகளாக இலங்கை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தி வந்துள்ளது. அத்துடன் நாடு முழுவதும் சுவையான மற்றும் சத்தான தயாரிப்புகள் மூலம் தலைமுறை தலைமுறையாக ஊட்டமளித்து வருகிறது. ஆரோக்கியமான குடும்பங்கள், வலுவூட்டப்பட்ட சமூகங்கள் மற்றும் பசுமையான பூமி ஆகியவற்றை ஆதரிப்பதில் இந்நிறுவனம் தொடர்ந்து உறுதியுடன் செயல்பட்டு வருகிறது. நெஸ்லே லங்கா நிறுவனம் தனது 90% - க்கும் அதிகமான தயாரிப்புகளை குருநாகலில் உள்ள அதிநவீன தொழிற்சாலையில் உள்நாட்டிலேயே உற்பத்தி செய்கிறது. பாதுகாப்பு மற்றும் தரத்திற்கான அதியுயர் தரநிலைகள் இங்கு தவறாது கடைப்பிடிக்கப்படுகின்றன.
