Jul 16, 2026 - 06:36 AM -
0
இந்தியாவின் தமிழ்நாடு - கர்நாடக எல்லைப் பகுதியான ஓசூரில் லேசான நில அதிர்வொன்று ஏற்பட்டுள்ளதாக இந்தியத் தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 3.0 ஆகப் பதிவாகியுள்ளதாக இந்திய மண்டல வானிலை ஆய்வு மையத் தரவுகள் குறிப்பிடுகின்றன.
தமிழ்நாட்டின் கிருஷ்ணகிரி மாவட்டத்திற்குட்பட்ட தேன்கனிக்கோட்டை - ஓசூர் பகுதிக்கு அருகிலேயே இந்த நில அதிர்வின் மையம் அமைந்திருந்ததோடு, இது பூமிக்கு அடியில் 10 கிலோமீற்றர் ஆழத்தில் உருவாகியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, இந்த நில அதிர்வு நிகழ்வானது 'சிறிய அளவிலான நிலநடுக்கம்' என்ற வகைக்குள் அடங்குவதாக அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
நில அதிர்வின் மையம் அமைந்திருந்த கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் கர்நாடக எல்லைப் பகுதிகளில் வசிக்கும் மக்களால் இந்த அதிர்வு உணரப்பட்டிருக்கலாம் என நம்பப்படுகின்றது.
இருப்பினும், இவ்வாறான சிறிய அளவிலான நில அதிர்வுகளினால் கட்டிடங்களுக்கோ அல்லது ஏனைய கட்டமைப்பு வசதிகளுக்கோ எந்தவித சேதங்களும் ஏற்படுவதில்லை என அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளனர்.
