Jul 16, 2026 - 07:19 PM -
0
பிரித்தானியர்களால் அறிமுகப்படுத்தப்பட்ட மிக பழைமையான பாரந்தூக்கிகளை மீண்டும் தற்போதைய நிலைக்கு மாற்றி, அபிவிருத்தி பணிகளை முன்னெடுக்கும் சுவாரஸ்ய நிகழ்வு தலவாக்கலை ரயில் நிலையத்தில் பதிவாகியிருந்தது.
ஒருகாலத்தில் இலங்கையின் பெரும்பாலான புகையிரத நிலையங்களில் பாரமான சரக்குகளை ஏற்றவும் இறக்கவும் முக்கிய பங்கு வகித்த பாரந்தூக்கியான டெரிக் பாரந்தூக்கிகள் நவீன இயந்திரங்களின் வருகையுடன் பயன்பாட்டிலிருந்து ஒதுக்கப்பட்டன.
இருப்பினும், தலவாக்கலை புகையிரத நிலையத்தில் நீண்டகாலமாக பயன்பாடின்றி காணப்பட்ட இந்த பாரம்பரிய புகையிரத சரக்கு பாரந்தூக்கியினை, அங்குள்ள புகையிரத நிலைய ஊழியர்கள் தங்களது தொழில்நுட்ப திறமையை பயன்படுத்தி மீண்டும் இயங்கக்கூடிய வகையில் சீரமைத்துள்ளனர்.
இந்நிலையில், டித்வா புயலினால் பாதிக்கப்பட்ட ரயில் பாதைகளின் புனரமைப்பு பணிகள் இடம்பெற்று வரும் நிலையில், அதற்கு தேவையான பொருட்களை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கும் இந்த பாரந்தூக்கி வெற்றிகரமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது.
இதன் மூலம், பெக்கோ இயந்திரங்கள், நவீன பாரந்தூக்கிகளை இயக்குவதற்கான அதிகளவான எரிபொருள், வாடகை, போக்குவரத்து மற்றும் தொழிலாளர் செலவுகள் என புகையிரத திணைக்களத்திற்கு ஏற்படும் பல இலட்சம் ரூபாய் செலவினம் தவிர்க்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
அனைத்து புகையிரத நிலையங்களுக்கும் பாரிய நவீன இயந்திரங்களை கொண்டு செல்வது நடைமுறையில் சிக்கலாக இருக்கும் நிலையில், அங்கு ஏற்கனவே உள்ள பழைய வசதிகளை புதுப்பித்து பயன்படுத்துவதற்கு இது முன்னுதாரணமாக பார்க்கப்படுகின்றது.
குறிப்பாக, எரிபொருள் இறக்குமதியை அதிகம் சார்ந்துள்ள இலங்கை போன்ற அபிவிருத்தி அடைந்து வரும் நாடுகளுக்கு, இவ்வாறான பழைய இயந்திரங்களை நவீன தேவைகளுக்கு ஏற்ப மறுசீரமைத்து பயன்படுத்துவது பொருளாதார ரீதியாகவும் சுற்றுச்சூழல் ரீதியாகவும் பெரும் நன்மைகளை வழங்கும் என நிபுணர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.
தலவாக்கலை புகையிரத நிலைய ஊழியர்களின் இந்த முன்மாதிரியான செயல், வளங்களை வீணாக்காமல் பாதுகாத்து பயன்படுத்தும் பண்பையும், குறைந்த செலவில் அதிக பயனைப் பெறும் அரச நிர்வாகத்தின் சிறந்த எடுத்துக்காட்டாகவும் மக்கள் மத்தியில் பெரிதும் பாராட்டப்பட்டு வருகின்றது.
--
