Jul 17, 2026 - 10:47 PM -
0
முன்னாள் பொலிஸ்மா அதிபர் சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவு மற்றும் மாலபே பொலிஸார் இணைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சி.டி. விக்ரமரத்னவின் சடலம் பிரேத பரிசோதனைக்காகக் கொழும்பு கிழக்கு போதனா வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இன்று (17) காலை மாலபே, தலாஹேன பகுதியில் உள்ள தனது இல்லத்தில் வைத்து, முன்னாள் பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்ரமரத்ன துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் உயிரிழந்துள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டனர்.
எவ்வாறாயினும், சி.டி. விக்ரமரத்ன தனது இல்லத்தில் வைத்துத் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்துகொண்டுள்ளதாகப் பொலிஸார் இதற்கு முன்னர் தெரிவித்திருந்தனர்.
இன்று பிற்பகல் குறித்த இடத்திற்குச் சென்ற கடுவலை நீதவான், நீதவான் விசாரணைகளை மேற்கொண்டார்.
தற்போதைய பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவும் சம்பவ இடத்திற்கு வருகை தந்திருந்ததாக அத தெரண செய்தியாளர் தெரிவித்தார்.
சி.டி. விக்ரமரத்னவின் மரணம் குறித்து முறையான விசாரணைகளை மேற்கொண்டு, அதன் முன்னேற்ற அறிக்கை ஒன்றை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு இதன்போது கடுவலை நீதவான், பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இலங்கையின் 35 வது பொலிஸ் மா அதிபராகக் கடமையாற்றிய சி.டி. விக்
ரமரத்ன, உயிரிழக்கும் போது 63 வயதாகும்.
1986 ஆம் ஆண்டு பொலிஸ் சேவையில் இணைந்த அவர், 2019 ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதலின் பின்னர் அப்போதைய பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, பதில் பொலிஸ் மா அதிபராக நியமிக்கப்பட்டார்.
அதன்பின்னர் அவர் 2020 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 27 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 25 ஆம் திகதி பதவியிலிருந்து ஓய்வு பெறவிருந்த போதிலும், புதிய பொலிஸ் மா அதிபர் ஒருவர் நியமிக்கப்படும் வரை அப்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பல சந்தர்ப்பங்களில் அவருக்குப் பதவிக் காலம் நீடிக்கப்பட்டதன் காரணமாக, மேலும் 08 மாதங்கள் வரை அவர் பொலிஸ் மா அதிபர் பதவியில் கடமையாற்றினார்.
இதன்படி, சி.டி. விக்ரமரத்ன 2023 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 23 ஆம் திகதி பொலிஸ் மா அதிபர் பதவியிலிருந்து ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
