Jul 17, 2026 - 11:23 PM -
0
2026 லங்கா பிரீமியர் லீக் (LPL) கிரிக்கெட் தொடரில் பங்கேற்கும் கிரிக்கெட் வீரர்களுக்கு ஆட்டநிர்ணயம் (Match Fixing) செய்யுமாறு அழுத்தம் கொடுத்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட ஜப்னா கிங்ஸ் அணியின் இணை உரிமையாளரான இந்திய நாட்டைச் சேர்ந்த மன்ஜோத் கல்ரா உள்ளிட்ட இரு சந்தேகநபர்களும் எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
இன்று (17) காலை விளையாட்டு ஊழல் ஒழிப்பு விசாரணை பிரிவின் அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டு கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டதைத் தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, குறித்த அதிகாரிகள் மற்றும் சந்தேகநபர்களின் சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களை ஆராய்ந்த பின்னர், கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம இந்த உத்தரவை பிறப்பித்தார்.
சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய விளையாட்டு ஊழல் ஒழிப்பு விசாரணைப் பிரிவின் அதிகாரிகள், இச்சம்பவத்துடன் தொடர்புடைய தொலைபேசி உரையாடல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.
"ஐயா... எல்.பி.எல் கிரிக்கெட் தொடரில் விளையாடும் வீரர்களுக்கு ஆட்டநிர்ணயம் செய்ய அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பாக இந்த இரு சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர். இதற்கமைய, பானுக ராஜபக்ஷ, துனித் வெல்லாலகே, அவிஷ்க பெர்னாண்டோ உள்ளிட்ட சில வீரர்களுக்கு இவர் ஆட்டநிர்ணய ஆலோசனைகளை முன்வைத்துள்ளார். பின்னர் 'பார்ன்ஸ் கஃபே' (Barnes Cafe) என்ற இடத்தில் வீரர்களைச் சந்தித்து, நான்கு போட்டிகளை ஆட்டநிர்ணயம் செய்வதற்காக 3 இலட்சம் அமெரிக்க டொலர்களை வழங்குவதாக சந்தேகநபர் முன்மொழிந்துள்ளார்.
இதன்பின்னர், சம்பந்தப்பட்ட வீரர்கள் இது குறித்து விளையாட்டு ஊழல் தடுப்பு விசாரணைப் பிரிவுக்குத் தகவல் வழங்கினர். அதற்கமைய, விசாரணை அதிகாரிகளின் அறிவுறுத்தலின்படி, இந்த வீரர்கள் ஒரு போட்டிக்கு 50,000 அமெரிக்க டொலர்களைக் கோரியுள்ளனர். இச்சம்பவத்துடன் தொடர்புடைய அனைத்து தொலைபேசி உரையாடல்களும் பதிவு செய்யப்பட்டுள்ளன. வீடியோ காட்சிகளும் உள்ளன. அவற்றை நாங்கள் இன்று சீலிட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.
“ஐயா இது 120 இலட்சம் ரூபா கொடுக்கல் வாங்கல். பின்னர் அது 80 இலட்சமாகக் குறைக்கப்பட்டு, அதன் பின்னர் 115 இலட்சத்திற்கு உடன்பாடு எட்டப்பட்டுள்ளது. அதற்கமைய, 95 இலட்சம் ரூபா பணத்தை இரண்டாவது சந்தேகநபர் நேற்று (16) கொழும்பு இலங்கை வங்கித் தலைமையகத்திற்கு முன்னால் வைத்து வழங்குவதற்காக வந்திருந்த போது இந்த சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர். கறுப்பு நிறப் பையிலேயே அந்தப் பணம் கொண்டு வரப்பட்டது. அந்தப் பையையும் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கின்றோம்.” என்றார்.
எவ்வாறாயினும், சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி நீதிமன்றத்தில் கருத்துத் தெரிவிக்கையில், சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை எனக் குறிப்பிட்டார்.
"முறைப்பாட்டுத் தரப்பால் முன்வைக்கப்பட்ட அனைத்துக் குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றோம். சந்தேகநபரான இந்த அணியின் உரிமையாளர் லஞ்சம் வழங்கியதற்கான எந்தவொரு சாட்சியமும் இல்லை. இவர்கள் பெரும் தொகைப் பணத்துடன் இலங்கைக்கு வந்திருப்பது கிரிக்கெட் விளையாட்டின் மேம்பாட்டிற்காகவே ஆகும். இந்தச் சந்தேகநபர்கள் இளைஞர்கள் ஆவர்."
இவ்விடயங்களைக் கருத்திற்கொண்டு சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்குமாறு சட்டத்தரணி நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தார்.
முன்வைக்கப்பட்ட அனைத்து விபரங்களையும் பரிசீலித்த நீதவான், இந்த சந்தர்ப்பத்தில் சந்தேகநபர்களுக்குப் பிணை வழங்கினால் விசாரணைகளுக்குத் தடங்கல் ஏற்படக்கூடும் எனத் தெரிவித்தார்.
இதற்கமைய, சந்தேகநபர்களை எதிர்வரும் 31 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
