Jul 21, 2026 - 10:04 AM -
0
ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்துவதற்கான ஈரானின் திறனை "மேலும் பலவீனப்படுத்துவதை" நோக்கமாகக் கொண்டு, ஈரானுக்கு எதிராக புதிய தாக்குதல்ளைத் தொடங்கியுள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அமெரிக்கா தொடர்ந்து 10 ஆவது நாளாக இந்தத் தாக்குதல்களை முன்னெடுத்து வருகிறது.
சமீபத்தில் ஜோர்தான் மற்றும் ஈராக்கில் மூன்று அமெரிக்க வீரர்கள் உயிரிழந்தமைக்கு பதிலடியாக, ஈரான் "கடுமையான விலையைக் கொடுக்க வேண்டியிருக்கும்" என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அறிவித்ததைத் தொடர்ந்து இந்தத் தாக்குதல்கள் தீவிரமடைந்துள்ளன.
முன்னதாக ஈரானின் இராணுவ மற்றும் தகவல் தொடர்பு மையங்களை இலக்கு வைத்துத் தாக்குதல்களை நடத்தியதாக அமெரிக்கா அறிவித்திருந்தது.
இதேவேளை, பஹ்ரைன், ஜோர்தான் மற்றும் சிரியாவில் உள்ள இலக்குகள் மீது தாக்குதல் நடத்தியதாக ஈரான் தெரிவித்துள்ளது.
தனது நாடு அமெரிக்காவுடன் ஒரு "பெரிய அளவிலான போரில்" ஈடுபட்டுள்ளதாக ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் (Masoud Pezeshkian) தெரிவித்துள்ளார்.
பிராந்தியத்தில் பதற்றத்தை மேலும் அதிகரிக்கும் வகையில், ஜோர்தான் மூன்று ஈரானிய ஏவுகணைகளை சுட்டு வீழ்த்தியதாகவும், குவைத் இராணுவம் ஈரானிய ட்ரோன்களைத் தடுத்து நிறுத்தியதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதனிடையே, ஹோர்முஸ் நீரிணை வழியே பயணித்த இரண்டு எண்ணெய் தாங்கி கப்பல்கள் வெடித்துச் சிதறியதாக ஈரானிய ஊடகங்கள் செய்தி வெளியிட்ட போதிலும், அமெரிக்க மத்திய கட்டளைப் பீடம் (CENTCOM) அந்தத் தாக்குதலை மறுத்துள்ளது.
