Jul 27, 2026 - 11:19 PM -
0
நமது நாட்டின் ஒவ்வொரு அரசியல் கட்சியும், அரசும் இன்றும் இந்த மலையக மக்களை தோட்டத் தொழிலாளர்களாக மாத்திரமே அழைத்து வருகின்றது. நாம் இம்மக்களை நாட்டின் காணி உரிமையைக் கொண்ட தோட்ட தொழில்முனைவோராக பலப்படுத்துவோம் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
தேர்தல் காலத்தில் பல்வேறு தரப்பினரும் காணி உரிமை, வீட்டு உரிமை, கொடுப்பனவுகள் மற்றும் சம்பளம் பற்றிப் பேசுகின்றனர். ரூபா 1000, 1500, 2000 என சம்பளம் பற்றி பிரஸ்தாபிக்கின்றனர். இன்று ரூபா 1750 கிடைப்பதும் பறிக்கப்படும் கொழுந்தின் கிலோ எண்ணிக்கையின் அடிப்படையிலேயாகும். மலையக மக்களின் பெரும்பான்மையானோர் இன்றும் லயன் தொடர் குடியிருப்புகளிலயே வசித்து வருகின்றனர் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
நமது நாட்டின் தேயிலை காணிகளில் 60% ஆனவை பெருந்தோட்ட வர்த்தகர்களுக்குச் சொந்தமாக காணப்படுகின்ற போதிலும், அவர்கள் சுமார் 30% ஆன தேயிலை உற்பத்தியையே செய்கின்றனர். ஆனால், 40% காணிகளை மட்டுமே கொண்டுள்ள சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்கள் 70% ஆன பங்களிப்பை பெற்றுத் தருகின்றனர்.
இந்தச் சம்பளப் பிரச்சினைக்குத் தீர்வு என்பது சம்பளத்தை அதிகரிப்பது மட்டுமல்ல, மாறாக, அரச மற்றும் தனியார் தோட்டங்களாக தேயிலை பயிரிடப்படாத, தேயிலை பயிர்ச்செய்கைக்குப் பொருத்தமான தரிசு நிலங்களை இந்தத் தோட்டச் சமூகத்திற்கு பிரித்து வழங்கி, அவர்களைச் சிறிய தேயிலை தோட்ட உரிமையாளர்களாக வலுவூட்டி, சொந்தமாக வீடு ஒன்றைக் கட்டிக்கொண்டு தேயிலை தொழில்முனைவோராக மாற்றுவதற்கு ஐக்கிய மக்கள் சக்தி தயார் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் வருடாந்த மாநாடு நேற்று (26) பலங்கொடையில் இடம்பெற்றது.
ஐக்கிய தோட்டத் தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் சுஜித் பெரேராவினால் ஏற்பாடு செய்யப்பட்ட இம்மாநாட்டில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார்.
இன்று இந்த மலையகப் பிரதேசங்களை அண்மித்த கல்வித் துறையில் பல பிரச்சினைகள் காணப்படுகின்றன. உபகரணங்கள், பௌதீக மற்றும் மனித வளப் பற்றாக்குறைகளும் இதில் நிலவுகின்றன. அதேபோல், சுகாதாரத் துறையிலும் குறைபாடுகள் காணப்படுகின்றன. இந்தப் பிரதேசங்களை ஒருங்கிணைத்து பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில் ஜனாதிபதி செயலணி ஒன்று ஸ்தாபிக்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார்.
மலையக மக்களை வலுவூட்டினால், அவர்களைச் சம்பளம் பெறும் தொழிலாளர்களாக இருக்கச் செய்வதை விட தொழில்முனைவோராக மாற்ற முடியும். அச்சமயம் தேர்தல் காலத்தில் கூட அவர்களை எவராலும் ஏமாற்ற முடியாது போகும். இதன் ஊடாக அவர்களால் பொருளாதார ஏணியின் உச்சத்திற்குச் செல்ல முடியும். தோட்டச் சமூகத்திற்கு நீதியை நிலைநாட்டுவோம் என கூறும் இந்த அரசாங்கம், 1979 ஆம் ஆண்டின் சட்டம் ஒன்றைப் பயன்படுத்திக் கொண்டு தோட்டச் சமூகத்தை தோட்டங்களிலிருந்து வெளியேற்றி வரும் நடவடிக்கையை முன்னெடுத்து வருகின்றது. இது குறித்து பாராளுமன்றத்தில் நான் பேசினேன்.
1889 ஆம் ஆண்டின் 13 ஆம் இலக்க இந்தியத் தோட்டத் தொழிலாளர் கட்டளைச் சட்டத்தின் 24(1) ஆம் பிரிவின் பிரகாரம் இந்த வீட்டு வசதிகள் இவர்களுக்கு உரித்தாகவே காணப்படுகின்றன. இவ்வாறு இருக்க தக்க குண்டர் படைகளை அனுப்பி மலையக மக்களை வெளியேற்றுவது சட்டவிரோதமான செயலாகும். அவர்களுக்காகச் சட்ட நடவடிக்கைகளை எடுக்க ஐக்கிய மக்கள் சக்தியிலிருந்து பிரத்தியேக சட்டத்தரணிகள் குழுவொன்றும் நியமிக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.
