Jul 31, 2026 - 04:17 PM
இந்தியாவில் முதல் நாளில் அதிக வசூல் குவித்த ஹாலிவுட் படம் என்ற புதிய வரலாற்றுச் சாதனையை 'ஸ்பைடர்மேன்: பிராண்ட் நியூ டே' படைத்துள்ளது.
மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின் சமீபத்திய படைப்பான இப்படம் அமெரிக்காவில் வெளியாவதற்கு முன்னதாகவே, இந்தியாவில் வெளியானது. நேற்று (30) இந்தியாவில் வெளியானநிலையில், இன்று (31) தான் அமெரிக்காவில் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் இந்தியாவில் பிளாக் புக்கிங் அல்லது முன்னோட்டக் காட்சிகள் எதுவும் இல்லாமலேயே முதல்நாளிலேயே 72.44 கோடி ரூபா வசூலித்து சாதனை படைத்துள்ளது.
இதற்கு முன்னதாக, 2019 இல் வெளியான அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம் முதல் நாளில் 65 கோடி ரூபா வசூலித்ததே சாதனையாக இருந்தது. தற்போது அந்த நீண்ட கால சாதனையை ஸ்பைடர்மேன் முறியடித்துள்ளார்.
ஹாலிவுட் படங்களை மட்டுமின்றி, இந்தியாவில் வெளியான சில பெரிய இந்தியப் படங்களின் முதல் நாள் வசூலையும் இது கடந்துள்ளது.
ஆங்கில பதிப்பு முதலிடத்தில் இருந்தாலும், இந்தி மற்றும் பிற இந்திய மொழிகளில் டப் செய்யப்பட்ட பதிப்புகளுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. மேலும் வேறு படங்கள் எதுவும் பெரிதாக வெளியாக நிலையில், இந்த விடுமுறை நாட்களில் (சனி, ஞாயிறு) இன்னும் வசூலை குவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டெஸ்டின் டேனியல் க்ரெட்டன் இயக்கியுள்ள இப்படத்தில், டாம் ஹாலண்ட் மற்றும் ஜெண்டாயா முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 'ஸ்பைடர்மேன்: நோ வே ஹோம்' படத்தின் தொடர்ச்சியாக, தனது அடையாளத்தை அனைவரும் மறந்த பிறகு பீட்டர் பார்க்கர் எதிர்கொள்ளும் புதிய சவால்களை இக்கதை விவரிக்கிறது.
ஸ்பைடர்மேன் திரைப்படங்களுக்கு எப்போதும் இந்திய ரசிகர்களிடம் இருக்கும் தனி வரவேற்பே இந்த பிரம்மாண்ட வசூலுக்கு முக்கியக் காரணம் எனத் திரையரங்கு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

