Sep 22, 2026 - 10:35 PM

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேவின் இதயம் வீக்கமடைந்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்துவதற்காக இதயத்தில் உபகரணம் ஒன்று பொருத்தப்பட்டுள்ளதாகவும் கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று (22) வெளிப்படுத்தப்பட்டுள்ளது.
அவரது சுகாதார நிலைமை குறித்து 9 பேர்கொண்ட மருத்துவக் குழுவினால் வெளியிடப்பட்ட அறிக்கையின் அடிப்படையில் இந்தத் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பில் அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலே உள்ளிட்ட மூன்று சந்தேகநபர்களுக்கு எதிரான வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஷானி அபேசேகர உள்ளிட்ட முறைப்பாட்டாளர்கள் சார்பில் மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் பின்வருமாறு கருத்து தெரிவித்தார்:
"கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, இந்த மூன்றாவது சந்தேகநபரான சுரேஷ் சலே ஜூன் 07 ஆம் திகதி முதல் இன்று வரை 100 நாட்களுக்கும் மேலாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். தேசிய வைத்தியசாலையின் இதயப் பிரிவுடன் இணைக்கப்பட்ட அவசர சிகிச்சைப் பிரிவிலேயே அவர் சிகிச்சை பெற்று வந்தார். வைத்தியசாலை பணிப்பாளரிடம் நாங்கள் கோரிய அறிக்கை தற்போது 9 வைத்தியர்களின் கையொப்பத்துடன் கிடைத்துள்ளது. அந்த மருத்துவ அறிக்கைகளின் அடிப்படையிலேயே நான் பேசுகிறேன். சந்தேகநபரின் இதயம் வீக்கமடைந்துள்ளதாகவும், அதனைக் கட்டுப்படுத்த ஒரு சாதனம் பொருத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு அரசாங்கப் பணத்தில் இருந்து 40 இலட்சம் ரூபா செலவாகியுள்ளது. ஈஸ்டர் தாக்குதலின் கொலையாளிக்கு இப்படித்தான் உபசரிக்கிறார்கள்."
இதன்போது தலையிட்ட நீதவான், "அவர் இன்னும் கொலையாளி அல்ல, சந்தேகநபர் மட்டுமே" எனக் குறிப்பிட்டார்.
மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திடம் மன்னிப்பு கோரிய பின்னர் மீண்டும் தனது கருத்துக்களைத் தொடர்ந்தார்:
"கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, பற்களில் பிரச்சினை என்று கூறி சந்தேகநபர் பற்களை நிரப்பிக் கொள்கிறார். நாங்கள் நீதிமன்றத்தில் இவற்றைச் சுட்டிக்காட்டிய பின்னரே, நேற்று அவரை சாதாரண வார்ட்டுக்கு மாற்றியுள்ளனர். தற்போது இதய நோய் மற்றும் மனநிலை அடிப்படையில் சந்தேகநபர் ஸ்திரமான நிலையில் உள்ளதாகவும், பற்கள் பிரச்சினை சீரானதும் அவரை விடுவிக்க முடியும் என்றும் மருத்துவ அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த சந்தேகநபரை தொடர்ந்து வைத்தியசாலையில் வைத்திருப்பதா இல்லையா என்பது குறித்து வரும் 28 ஆம் திகதி வைத்தியசாலையின் மருத்துவக் குழு கூடி விவாதிக்க உள்ளது. வைத்தியசாலை தரப்பில் இருந்து 28 ஆம் திகதி நல்ல பதில் கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம். அவரை 28 ஆம் திகதி வைத்தியசாலையில் இருந்து விடுவித்து விசாரணை அதிகாரிகளிடம் ஒப்படைக்க முடிந்தால், அதன் முழுப் பொறுப்பையும் ஏற்க நாங்கள் தயார். இந்த சந்தேகநபரை சித்திரவதை செய்ய வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை. சட்டப்பூர்வமாக தண்டனை வழங்கவே விரும்புகிறோம். எப்படி இருப்பினும், தற்போது இயற்கை மூலமாகவே அவருக்கு தேவையான தண்டனைகள் கிடைத்து வருகின்றன.
அதேபோன்று, சந்தேகநபருக்குச் சொந்தமான மடிக்கணினி மற்றும் தொலைபேசிகளின் கடவுச்சொற்களை (passwords) வழங்குமாறு தாங்கள் உத்தரவிட்டிருந்தீர்கள். ஆனால் இதுவரை அந்த கடவுச்சொற்கள் வழங்கப்படவில்லை. கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என அவர் கூறுகிறார். விசாரணைகளுக்கு கடவுச்சொற்கள் மிகவும் அவசியமானவை."
அதன்பின்னர், சந்தேகநபரான முன்னாள் அரச புலனாய்வுச் சேவைப் பணிப்பாளர் சுரேஷ் சலே சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் கருத்து தெரிவித்தார்:
"கனம்பொருந்திய நீதிபதி அவர்களே, மருத்துவ அறிக்கையை என்னால் இன்னும் ஆய்வு செய்ய முடியாமல் போனது. அறிக்கையை ஆய்வு செய்து அது குறித்து பின்னர் கருத்து தெரிவிக்க எதிர்பார்க்கிறேன். அடுத்ததாக, எனது நண்பர் கடவுச்சொற்கள் குறித்துக் குறிப்பிட்டார். இராணுவ புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் பின்பற்றும் ஒரு நடைமுறை உள்ளது. ஒன்று அல்லது இரண்டு நாட்களுக்குப் பிறகு அவர்கள் கடவுச்சொற்களை மாற்றுவார்கள். கடவுச்சொற்கள் வேறு நபர் கைக்குச் செல்வதைத் தடுக்கவே அவ்வாறு செய்கிறார்கள். அவர்கள் நீண்ட காலத்திற்கு கடவுச்சொற்களை நினைவில் வைத்திருப்பதில்லை. கைது செய்யப்பட்டு பல மாதங்களுக்குப் பிறகே சந்தேகநபரிடம் கடவுச்சொல் கேட்கப்படுகிறது. அதற்கு பதிலளித்துள்ளார். ஆனால் இதுவரை எந்த வாக்குமூலமும் பதிவு செய்யப்படவில்லை."
ஜனாதிபதி சட்டத்தரணிக்கு பதிலளித்த மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ்:
"கடவுச்சொற்கள் குறித்து வைத்தியசாலையிலும் அதற்கு வெளியேயும் பல வாக்குமூலங்கள் பெறப்பட்டன. அந்த ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் கடவுச்சொற்கள் நினைவில் இல்லை என்றே கூறப்பட்டது. சந்தேகநபர் கைது செய்யப்பட்டபோது காரில் இருந்த மடிக்கணினி தனது மகளுடையது எனத் தெரிவித்தார். அந்த மடிக்கணினியைக் கொடுக்காமல் தவிர்க்கவே அவர் முயன்றார். அதேபோல், ஈஸ்டர் தாக்குதல் குறித்து மக்கள் பிரதிநிதிகள் பாராளுமன்றத்திற்குள்ளும் வெளியிலும் பல கருத்துக்களைத் தெரிவித்துள்ளனர். அவர்களிடம் வாக்குமூலம் பெற்று விசாரணைகளை விரைவுபடுத்த எதிர்பார்க்கிறோம். அவர்களிடம் வாக்குமூலங்களைப் பதிவு செய்யுமாறு குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு எழுத்துப்பூர்வமாக அறிவிக்கிறேன்."
அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ மீண்டும் தெரிவிக்கையில்:
"இதுவரை விசாரணை நடத்தி எதுவும் செய்ய முடியாமல், தற்போது அரசியல்வாதிகளின் அறிக்கைகளை அடிப்படையாக வைத்து அதனைச் செய்ய முயல்கிறார்கள். குற்றப் புலனாய்வுத் திணைக்கள விசாரணை அதிகாரிகளின் திவால்தன்மையையே இது காட்டுகிறது."
முன்வைக்கப்பட்ட கருத்துக்களை பரிசீலித்த கோட்டை நீதவான், இந்த வழக்கின் விசாரணை முன்னேற்றம் குறித்த அறிக்கையை ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி சமர்ப்பிக்குமாறு உத்தரவிட்டார்.
இதன்படி, வழக்கு ஒக்டோபர் 21 ஆம் திகதி பிற்பகல் 2 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.





























