Aug 14, 2026 - 06:35 AM

ஹோர்முஸ் நீரிணையை கடந்து சென்றுகொண்டிருந்த தங்களது இரண்டு கப்பல்கள் தாக்கப்பட்டதாகவும், இதில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை எனவும் அபுதாபி தேசிய எண்ணெய் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்த தாக்குதலை ஈரான் நடத்தியதாக ஐக்கிய அரபு இராச்சியம் குற்றம் சாட்டியுள்ளது.
ஒரு வாரத்திற்கும் குறைவான காலத்தில் ADNOC கப்பல்கள் சம்பந்தப்பட்ட இரண்டாவது சம்பவம் இதுவாகும்.
சனிக்கிழமையன்று, அரசு எண்ணெய் நிறுவனத்துடன் தொடர்புடைய ஒரு கப்பல் நீரிணை வழியாக சென்றபோது, அதன் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதாக கூறி ஐக்கிய அரபு இராச்சியம் அதனைக் கண்டித்தது.
ஐக்கிய அரபு இராச்சியத்தின் அரசு செய்தி நிறுவனத்தின் தகவலின்படி, நிலைமை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டுவிட்டதாக ADNOC தெரிவித்துள்ளது.
இரண்டு ADNOC கப்பல்கள் மீதான பகைமையான ஈரானியத் தாக்குதல் என குறிப்பிட்டதை ஐக்கிய அரபு இராச்சிய வெளியுறவு அமைச்சு கண்டித்தது.
ஈரானின் புரட்சிகர பாதுகாப்பு படையினர், வர்த்தக கப்பல்களை குறிவைத்தும், பொருளாதார அழுத்தம் அல்லது மிரட்டலுக்கான ஒரு கருவியாக அந்த நீர்வழியை பயன்படுத்தியும் கடற்கொள்ளை நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர் என்றும், இது பிராந்திய ஸ்திரத்தன்மை மற்றும் உலகளாவிய எரிசக்தி பாதுகாப்புக்கும் நேரடி அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது என்றும் கூறியது.
இது தொடர்பில் ஈரான் மற்றும் ஈரானிய புரட்சிகர பாதுகாப்பு படை ஆகியன எவ்வித அறிவிப்பையும் வௌியிடவில்லை.























