Aug 15, 2026 - 09:46 PM

இலங்கையின் பல பிரதேசங்களில் நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக, பிரதான மற்றும் சிறிய நீர்த்தேக்கங்களின் நீர் மட்டம் வேகமாக குறைந்து வருகிறது. இதனால் மக்கள் மற்றும் விலங்கினங்கள் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளதுடன், பெருமளவிலான பயிர்ச் சேதங்களும் ஏற்பட்டுள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்திற்குச் சொந்தமான 74 நீர்த்தேக்கங்களின் மொத்த நீர் கொள்ளளவு தற்போது 37% ஆகக் குறைந்துள்ளது.
குறிப்பாக, விவசாய அபிவிருத்தி திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் சிறிய குளங்களுக்கு இதனால் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதன் காரணமாக, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
இலங்கையின் குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் பல பிரதான கட்டமைப்புகளின் கீழ் நிர்வகிக்கப்படுகின்றன.
அதற்கமைய பெரிய குளங்கள் மற்றும் நீர்த்தேக்கங்கள் மகாவலி மற்றும் நீர்ப்பாசன திணைக்களத்தினாலும், சிறிய குளங்கள் விவசாய அபிவிருத்தி திணைக்களத்தினாலும் நிர்வகிக்கப்படுகின்றன.
தற்போது நிலவும் கடுமையான வறட்சியான வானிலையின் தாக்கம் சிறிய குளங்களையே பெரிதும் பாதித்துள்ளது.
மாவட்டங்கள் வாரியாகப் பார்த்தால் அம்பாறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்கள் கடுமையான பாதிப்புகளைச் சந்தித்துள்ளன.
நீர்ப்பாசனத் திணைக்களத்தின் கீழ் நிர்வகிக்கப்படும் அம்பாறை மாவட்டத்தின் 9 பிரதான நீர்த்தேக்கங்களின் தற்போதைய நீர்மட்டம் 23% ஆகக் குறைந்துள்ளதாக அத்திணைக்களத்தின் தரவுகள் தெரிவிக்கின்றன.
அதேபோல், மட்டக்களப்பு மாவட்டத்தின் 4 நீர்த்தேக்கங்களில் உள்ள நீர்மட்டம் 26% ஆகவும், திருகோணமலை மாவட்டத்தின் பிரதான நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 28% ஆகவும் காணப்படுகிறது.
பொலன்னறுவை மாவட்டத்தில் உள்ள 4 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் 42% ஆகக் குறைந்துள்ளதுடன், ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் உள்ள 10 நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் சராசரியாக 43% ஆக உள்ளது.
நீர்மட்டம் இவ்வாறு குறைந்துள்ளமையினால் மக்களும் விலங்குகளும் கடுமையான குடிநீர் தட்டுப்பாட்டை எதிர்நோக்கியுள்ளனர்.
வறண்ட வானிலையின் தாக்கத்தால் பல பிரதேசங்களில் நெற்பயிர்கள் சேதமடைந்துள்ளதுடன், ஏனைய பயிர்களும் அழிவடைந்துள்ளன.
ஹிங்குரக்கொட பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட கித்துல்உத்துவ குளம் வற்றியதால் சுமார் 50 விவசாயக் குடும்பங்கள் கடும் இன்னல்களுக்கு ஆளாகியுள்ளனர்.
தண்ணீர் இல்லாததால் 50 ஏக்கருக்கும் அதிகமான பயிர்கள் ஏற்கனவே சேதமடைந்துள்ளன.
தற்போது நிலவும் கடுமையான வறட்சி காரணமாக அம்பாறை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டமும் வேகமாக குறைந்துள்ளதால், மீனவர்கள் பெரும் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர்.
நிலவும் கடுமையான வறட்சி காரணமாக விவசாயத்திற்குத் தேவையான தண்ணீரைப் பெற முடியாமல் திருப்பனை கரம்பைகம பகுதியில் சில பயிர்களை கைவிட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
மராகுளம் - மஹவெவ, அலுதபெந்திவெவ, ஒபடேகமவெவ, திக்வெவ உள்ளிட்ட பல சிறிய குளங்களின் நீர்மட்டம் வேகமாக குறைந்து வருவதால் விவசாயிகள் கடும் நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளனர்.
இதனால் கறவை மாடுகளுக்கு உணவும் தண்ணீரும் வழங்குவதும் பிரச்சினையாக மாறியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையில், லக்கல களு கங்கை நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் குறைந்ததைத் தொடர்ந்து, களு கங்கை நிர்மாணத்தின் போது மூழ்கிய பல்லேகம நகரத்தின் சில இடங்கள் தற்போது மீண்டும் வெளியே தெரியத் தொடங்கியுள்ளன.
கந்தளாய் நீர்த்தேக்கத்தின் நீர்மட்டம் வெகுவாகக் குறைந்துள்ளதால், எதிர்வரும் சிறுபோகச் செய்கை அபாயகரமான நிலையை எட்டியுள்ளது.
தண்ணீர் இன்றி அப்பகுதியில் விலங்குகள் இறந்து கிடப்பதையும் காண முடிகிறது.
இதனிடையே, வவுனியா, முல்லைத்தீவு, திருகோணமலை, பொலன்னறுவை, மட்டக்களப்பு, அம்பாறை மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களின் சில பிரதேசங்களில் நாளை நண்பகல் வேளையில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை 'கவனத்தில் கொள்ளப்பட வேண்டிய' மட்டத்தில், அதாவது 39 முதல் 45 செல்சியஸ் பாகைக்கு இடைப்பட்ட அளவில் இருக்கும் என வானிலை அவதானிப்பகம் தெரிவித்துள்ளது.
தற்போது நிலவும் அதிக வெப்பமான வானிலையினால் உடலிலிலிருந்து அதிகளவு நீர் வெளியேறி நீரிழப்பு (Dehydration) ஏற்படும் சாத்தியக்கூறுகள் அதிகமாக இருப்பதால், முடிந்தவரை அதிகமாக தண்ணீர் அருந்துமாறு சிறுவர் நோய் விசேட வைத்தியர்கள் கேட்டுக்கொள்கின்றனர்.























