Aug 17, 2026 - 04:03 PM



கொமர்ஷல் வங்கிக் குழுமம், இலங்கையின் தனியார் வங்கித் துறையில் ரூ. 3 டிரில்லியன் வைப்புத் தொகை எல்லையைக் கடந்த முதல் வங்கி என்ற புதிய மைல்கல்லை 2026 நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் எட்டியதன் மூலம், நிதியியல் இடைநிலையாளர்களில் தனது தலைமைத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது.
2026 ஜூன் 30 உடன் நிறைவடைந்த ஆறு மாத காலப்பகுதியில், குழுமத்தின் வைப்புத் தொகையானது மாதாந்த சராசரி ரூ. 52.52 பில்லியன் என்ற அடிப்படையில், மொத்தமாக ரூ. 315.13 பில்லியனால் வளர்ச்சியடைந்து, ஆண்டின் முதல் பாதியில் ரூ. 3.02 டிரில்லியனாக நிறைவுபெற்றது. கடந்த 12 மாத காலப்பகுதியில், வைப்புத் தொகையானது 20.33% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியுடன் மாதாந்த சராசரி ரூ. 42.46 பில்லியனாக உயர்ந்துள்ளது. மதிப்பாய்வுக்கு உட்படுத்தப்பட்ட கடந்த ஆறு மாதங்களில், நிறுவனக் குழுமத்தின் மொத்தக் கடன்கள் மற்றும் முற்பணங்கள் மாதாந்த சராசரி ரூ. 45.07 பில்லியன் என்ற ரீதியில், ரூ. 270.43 பில்லியனால் அதிகரித்து, கடன் புத்தகப் பெறுமதியை ரூ. 2.36 டிரில்லியனாக உயர்த்தியது. இது வங்கியின் நிதியியல் இடைநிலையாளர் வகிபாகத்தின் பங்களிப்பை வெளிப்படுத்துகிறது. கடந்த 12 மாதங்களில் கடன் வழங்கலானது மாதாந்த சராசரி ரூ. 52.04 பில்லியன் என்ற ரீதியில் ரூ. 624.48 பில்லியனால் அல்லது 36.07% இனால் வளர்ச்சியடைந்துள்ளது.
கொழும்பு பங்குச் சந்தையில (CSE) சமர்ப்பிக்கப்பட்ட இடைக்கால நிதி அறிக்கைகளின்படி, குழுமத்தின் மொத்தச் சொத்துக்கள் 2025 டிசம்பர் முதல் 10.68% அல்லது ரூ. 361 பில்லியனால் அதிகரித்து, 2026 ஜூன் 30 நிலவரப்படி ரூ. 3.74 டிரில்லியனாகக் காணப்பட்டது. இது முந்தைய 12 மாதங்களுடன் ஒப்பிடுகையில் 19.42% அல்லது ரூ. 608.16 பில்லியன் என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியாகும்.
உலகளாவிய மற்றும் பிராந்திய முன்னேற்றங்களின் தாக்கங்கள் வணிகங்கள் மற்றும் பொருளாதாரங்களில் தொடர்ந்து பாதிப்பை ஏற்படுத்தி வரும் நிலையில், எமது அடிப்படை வங்கிச் செயற்பாடுகளின் நீடித்த பலத்தினால் உறுதிப்படுத்தப்பட்ட எமது மீண்டெழும் தன்மையின் மீது எமது பங்குதாரர்கள் நம்பிக்கை கொள்ளலாம். என கொமர்ஷல் வங்கியின் தலைவர் திரு. ஷர்ஹான் முஹ்சீன் தெரிவித்தார். மாறிவரும் சவால்களுக்கு ஏற்ப எமது முன்னறிவிப்புகளையும் மூலோபாய ரீதியான செயற்பாடுகளையும் நாம் தொடர்ந்து செம்மைப்படுத்தி வருவதுடன், எமது மூலோபாய தொலைநோக்குப் பார்வையில் உறுதியாக இருந்து, எமது வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாம் சேவை செய்யும் சமூகத்திற்கு நிலையான நன்மைகளை வழங்குவதில் அர்ப்பணிப்புடன் இருக்கிறோம். என்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.
கொமர்ஷல் வங்கியின் முகாமைத்துவப் பணிப்பாளரும் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான திரு. சனத் மனதுங்க கருத்துத் தெரிவிக்கையில்: வெளிப்புறக் காரணிகளின் பாதகமான தாக்கங்களைத் தணிப்பதற்காகப் போதுமான இடையகங்களை (Buffers) பேணுவதற்கான எமது முன் எச்சரிக்கையான அணுகுமுறை எமது ஆறு மாத கால முடிவுகளில் தெளிவாக வெளிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் இரண்டாம் காலாண்டுடன் தொடர்புடைய வலுக்குறைவு ஒதுக்கீட்டின் (Impairment provisioning) அதிகரிப்பும் அடங்கும். நிலையற்ற உலகப் பொருளாதாரச் சூழலால் இடர் முகாமைத்துவத்திற்கு நாம் அதிக முக்கியத்துவம் அளித்து வரும் அதேவேளை, எத்தகைய பாதகமான காலங்களிலும் எமது வாடிக்கையாளர்களுக்கு ஆதரவளிக்க நாம் தயாராக உள்ளோம் என்றார்.
கொமர்ஷல் வங்கிக் குழுமம் இந்த ஆறு மாத காலப்பகுதியில் நிதிச் சேவைகள் மீதான வரிகளுக்கு முன்னரான தொழிற்பாட்டு இலாபமாக ரூ. 63.62 பில்லியனைப் பதிவு செய்துள்ளது, இது 14.44% வளர்ச்சியாகும். நிதிச் சேவைகள் மீதான வரிகள் 20.38% இனால் அதிகரித்து ரூ. 10.56 பில்லியனாகக் காணப்பட்ட நிலையில், குழுமம் ரூ. 53.05 பில்லியன் வருமான வரிக்கு முன்னரான இலாபத்தைப் பதிவு செய்துள்ளது. இது 13.33% வளர்ச்சியாகும். மதிப்பாய்வு செய்யப்பட்ட காலப்பகுதிக்கான வருமான வரி 12.67% இனால் அதிகரித்து ரூ. 17.63 பில்லியனாகக் காணப்பட்ட நிலையில், குழுமத்தின் வரிக்குப் பின்னரான தேறிய இலாபம் 13.66% வளர்ச்சியுடன் ரூ. 35.42 பில்லியனாகப் பதிவாகியுள்ளது.
தனிப்பட்ட ரீதியில், கொமர்ஷல் வங்கி இந்த ஆறு மாதங்களில் முறையே 12.39% மற்றும் 12.45% வளர்ச்சியைப் பதிவு செய்து, ரூ. 50.85 பில்லியன் வரிக்கு முன்னரான இலாபத்தையும், ரூ. 33.79 பில்லியன் வரிக்குப் பின்னரான இலாபத்தையும் ஈட்டியுள்ளது.
2026 ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் வுநைச 1 மூலதன விகிதம் 13.23% ஆகவும், மொத்த மூலதன விகிதம் 16.58% ஆகவும் காணப்பட்டது. இது ஒழுங்குமுறை குறைந்தபட்ச விகிதங்களான 10% மற்றும் 14% ஐ விட அதிகமாகும்.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது.
கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும்.
கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது.
மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

























