Aug 19, 2026 - 07:39 AM





கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழாவின் இரண்டாவது கும்பல் பெரஹர இன்று (19) மாலை 6.41 மணிக்குத் தொடங்கும் சுப வேளையில் வீதி உலா வரவுள்ளது.
இரண்டாவது கும்பல் பெரஹராவிற்காக செயல்படுத்தப்படும் பாதுகாப்பு நடவடிக்கைகள் மற்றும் போக்குவரத்து திட்டத்தை பொலிஸார் வெளியிட்டுள்ளனர்.
இதன்படி, இன்றைய இரண்டாவது கும்பல் பெரஹரா மாளிகையிலிருந்து ஆரம்பமாகி தளதா வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி, ராஜா வீதி வழியே சென்று மீண்டும் மாளிகையை சென்றடையவுள்ளது.
ஸ்ரீ தளதா மாளிகையினால் ஆண்டுதோறும் நடாத்தப்படும் கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க அசல பெரஹரா திருவிழா ஓகஸ்ட் 28 ஆம் திகதி வரை வீதி உலா வரவுள்ளது.
இதற்காக இலங்கை பொலிஸாரினால் விசேட பாதுகாப்பு திட்டமும் போக்குவரத்து திட்டமும் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதுடன், வீதித் தடைகள், பாதுகாப்பு கடமைகள், வாகனங்கள் மற்றும் நபர்களை சோதனையிடுதல், சுற்றுலாப் பயணிகளுக்கு வழிகாட்டுதல் மற்றும் வாகனங்களை நிறுத்துதல் உள்ளிட்ட விசேட திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இன்று நடைமுறைப்படுத்தப்படும் போக்குவரத்து திட்டம் மற்றும் மாற்று வழிகள் கீழே தரப்பட்டுள்ளன:
கட்டுகஸ்தோட்டையிலிருந்து கண்டி நகரத்திற்கு வரும் அனைத்து கனரக வாகனங்களும் மஹய்யாவ சந்திப்பில் இருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியே பொலிஸ் சந்திக்கு வந்து கண்டி நகரத்தை நோக்கி செல்ல முடியும்.
கட்டுகஸ்தோட்டை திசையிலிருந்து வரும் இலகுரக வாகனங்கள் டி.எஸ். சேனாநாயக்க வீதி வழியே வந்து குறுக்கு வீதி (Cross Street) வழியே யட்டிநுவர வீதியை அடைந்து, வலதுபுறம் திரும்பி மீரமக்கம் பள்ளிவாசல் அருகில் இடதுபுறமாகச் சென்று திலக் ரத்நாயக்க மாவத்தை வழியே செல்ல முடியும்.
கட்டுகஸ்தோட்டை திசையை நோக்கி வெளியேறும் வாகனங்கள் பொலிஸ் சந்திப்பில் இருந்து திலக் ரத்நாயக்க மாவத்தை வழியே மஹய்யாவ திசையை நோக்கி செல்ல முடியும்.
தன்னேகும்புர மற்றும் அம்பிட்டிய திசையிலிருந்து வரும் வாகனங்கள் சங்கராஜ மாவத்தை வழியே வேல்ஸ் பார்க் சந்திக்கு வந்து, எஹேலபொல குமாரிஹாமி மாவத்தையில் வலதுபுறம் திரும்பி போகம்பறை, புகையிரத நிலையத்திற்கு அருகிலிருந்து கொழும்பு திசையை நோக்கிச் செல்லும் வாகனங்கள் இடதுபுறமாகவும், நகரத்தை நோக்கிச் செல்லும் வாகனங்கள் வலதுபுறமாகவும் செல்ல முடியும்.
அத்துடன் ரஜபிஹில்ல மாவத்தை சந்திப்பில் இருந்து பள்ளிவாசல் வீதி வழியே கண்டி நகரத்திற்குள் நுழைய முடியும்.
நகரத்திலிருந்து அம்பிட்டிய, தெல்தெனிய பாதையில் செல்லும் வாகனங்கள் கடிகாரக் கோபுர சுற்றவட்டத்திலிருந்து தளதா வீதி வழியே வந்து, குயின்ஸ் ஹோட்டலின் பக்கவாட்டு வாயிலுக்கு அருகிலிருந்து ஜோய் படகு சேவைப் பகுதியைக் கடந்து சங்கராஜ மாவத்தை வழியே செல்ல முடியும்.
மேலும், போகம்பர சுற்றவட்டத்தின் எஹேலபொல குமாரிஹாமி மாவத்தை, ரஜபிஹில்ல மாவத்தை, வேல்ஸ் பார்க் சந்தி வழியாக சங்கராஜ மாவத்தை வழியே அம்பிட்டிய மற்றும் தன்னேகும்புர திசையை நோக்கிச் செல்ல முடியும்.
கொழும்பு திசையிலிருந்து கண்டி நகரத்திற்குள் நுழைவதற்கும், கண்டி நகரத்திலிருந்து கொழும்பு திசையை நோக்கி வெளியேறுவதற்கும் வில்லியம் கோபல்லவ மாவத்தை மற்றும் பழைய பேராதனை வீதி ஆகிய இரண்டையும் இருபுறமும் பயன்படுத்த முடியும்.

இதற்கிடையில், இலங்கை கலாச்சாரத்தின் பெருமையை உலகிற்கு பறைசாற்றும் 1716 ஆவது ஸ்ரீ தளதா பெரஹரா திருவிழா நேற்று இரவு 6.52 மணிக்குத் தொடங்கிய சுப வேளையில் ஆரம்பமானது.
நேற்று ஆரம்பமான முதலாவது கும்பல் பெரஹராவில் பேழையை சுமந்து செல்லும் பாக்கியம் ஸ்ரீ தளதா மாளிகையின் மங்கள யானையான ‘இந்திரராஜா’ யானைக்கு கிடைத்தது.
பக்கபலமாக ‘மியன் ராஜா’ மற்றும் ‘கோட்டே ராஜா’ ஆகிய யானைகள் சென்றன.
பாரம்பரிய மற்றும் வண்ணமயமான பல நடன அங்கங்களைக் கொண்ட பெரஹராவைக் காண்பதற்கு உள்நாட்டு, வெளிநாட்டுப் பொதுமக்கள் பெருமளவில் திரண்டிருந்தனர்.

























