Aug 24, 2026 - 01:29 PM





பெரும்போகத்தை முன்கூட்டியே ஆரம்பித்து, குறிப்பிடத்தக்க நீரையும் சேமித்து, அடுத்த சிறுபோகத்தையும் மார்ச் 15ஆம் திகதி அல்லது ஏப்ரல் மாத தொடக்கத்திற்குள் ஆரம்பிக்க வேண்டும் என இலங்கை மகாவலி அதிகாரசபையின் நீர் முகாமைத்துவ செயலகப் பணிப்பாளர் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்துள்ளார்.
அவ்வாறு செய்தால் இரண்டு போகங்களையும் எவ்வித பிரச்சினையுமின்றி வெற்றிகரமாக முன்னெடுக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அத தெரண BIG FOCUS நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மகாவலி அமைப்பிற்குட்பட்ட நீர்த்தேக்கங்களில் தற்போது 54 சதவீதமான நீர் கொள்ளளவு காணப்படுவதுடன், இது கணிசமான ஒரு மட்டமாகும் என்றும் புள்ளிவிவரத் தரவுகளை மேற்கோள்காட்டி அவர் சுட்டிக்காட்டினார்.
அதேபோன்று, வளவை அமைப்பின் நீர் கொள்ளளவு சுமார் 57 சதவீதமாக உள்ளதாகவும் பொறியியலாளர் நிலந்த தனபால தெரிவித்தார்.
ஒக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களில் மழைவீழ்ச்சி அதிகரிப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளபோதிலும், டிசம்பர் முதல் ஏப்ரல் வரையிலான காலப்பகுதியில் உலர் வலையத்திற்கு கணிசமான மழைவீழ்ச்சி கிடைக்காத ஒரு நிலைமை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதற்கமைய, நிலவும் நீர்வளங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பெரும் போகத்தை முன்னதாகவே ஆரம்பித்து, சிறுபோகத்தையும் குறித்த காலத்திற்கு முன்பதாக ஆரம்பிப்பதன் மூலம் இரண்டு போகங்களையும் வெற்றிகரமாக முன்னெடுத்துச் செல்ல முடியும் என அவர் வலியுறுத்தினார்.























