Aug 25, 2026 - 12:35 PM





கம்பளை, புப்புரஸ்ஸ பொலிஸ் பிரிவுக்குட்பட்ட டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வவுனியாவிலிருந்து வருகை தந்த 3 வயது சிறுமி ஒருவர், தண்ணீர் என நினைத்து வீட்டிலிருந்த ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ என்ற இரசாயனத்தைக் குடித்ததால் உயிரிழந்துள்ளார்.
இது தொடர்பான மரண விசாரணை நேற்று (24) அன்று கம்பளை வைத்தியசாலையில் நடைபெற்றபோதே இந்த அதிர்ச்சித் தகவல் தெரியவந்துள்ளது.
வவுனியா, செட்டிகுளம் பகுதியைச் சேர்ந்த தினேஸ்காரம் ஹயனிகா என்ற சிறுமியே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்தவராவார்.
சிறுமியின் தாய், தந்தை உள்ளிட்ட குடும்பத்தினர் டெல்டாவத்த பகுதியில் உள்ள உறவினர் வீட்டிற்கு வருகை தந்திருந்தனர்.
கடந்த ஓகஸ்ட் 23 அன்று இரவு 8 மணியளவில் சிறுமிக்கு தாகம் ஏற்பட்டுள்ளது. அப்போது, வீட்டின் சன்னல்படியில் வைக்கப்பட்டிருந்த போத்தலில் இருந்த திரவத்தைத் தண்ணீர் என நினைத்து அச்சிறுமி குடித்ததாக மரண விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வவுனியாவிலிருந்து வந்த குடும்பத்தினர் அன்றைய தினம் மாலையில் வீட்டின் வெளிப்புறத்தில் பொழுதைக் கழித்துக்கொண்டிருந்தபோது, சிறுமி வீட்டிற்குள் சென்று ஜன்னலில் இருந்த அந்த இரசாயன திரவத்தைக் குடித்துள்ளார்.
இது தொடர்பாக தொழுவ பிரதேச செயலகப் பிரிவின் திடீர் மரண விசாரணை அதிகாரி லலித் வர்ணரத்ன முன்னிலையில் நடைபெற்ற மரண விசாரணையில் சாட்சியமளித்த சிறுமியின் தந்தையான ஜே. விக்னேஸ்வரன் தெரிவித்ததாவது:
"எங்களுக்கு ஒரே ஒரு பெண் குழந்தைதான். உறவினர் வீட்டிற்கு வந்திருந்தபோதுதான் இந்தத் துயரம் நடந்தது. மகள் அந்த திரவத்தைக் குடித்தவுடனேயே அவளது வாயிலிருந்து உமிழ்நீர் நுரைத்து வெளிவந்தது. நான் வெளியே இருந்தபோது வீட்டில் இருந்தவர்கள் ஓடிவந்து எனக்கு விடயத்தைக் கூறினார்கள். நாங்கள் உடனடியாக பன்விலதென்ன வைத்தியசாலைக்குக் குழந்தையைக் கொண்டு சென்றோம். ஆனால், குழந்தை ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர் கூறிவிட்டார்" என வேதனையுடன் தெரிவித்தார்.























