Aug 26, 2026 - 09:26 AM





இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக தனது பதவிக்காலத்தை உத்தியோகபூர்வமாக ஆரம்பிப்பதைக் குறிக்கும் வகையில் அமெரிக்கத் தூதுவர் எரிக் மயர் தனது தூதாண்மை நியமனச்சான்றுகளை இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிடம் நேற்று (25) கையளித்தார்.
இவ்வைபவத்தின் பின்பு கருத்துத் தெரிவித்த தூதுவர் மயர்,
“ஜனாதிபதி திசாநாயக்கவிடம் எனது தூதாண்மை நியமனச்சான்றுகளை கையளித்தமையானது எனக்குக்கிடைத்த கௌரவமாகும். 78 வருடங்களுக்கும் மேலாக நீடித்திருக்கும் ஒரு பங்காண்மையில், இலங்கையை ஒரு நண்பன் என்று அழைப்பதில் அமெரிக்கா பெருமை கொள்கிறது. அமெரிக்க - இலங்கை உறவுகளை மேலும் பலப்படுத்துவதற்கும், புதிய பொருளாதார வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், எமக்கிடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பினை ஆழப்படுத்துவதற்கும், சுதந்திரமான, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு இந்தோ - பசிபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்கும் நான் ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.” எனக் குறிப்பிட்டார்.
தூதுவர் மயர், இலங்கைக்கான 29 ஆவது அமெரிக்கத் தூதுவராக தனது கடமைகளைப் பொறுப்பேற்பதற்காக கடந்த 24 ஆம் திகதி மாலை கொழும்பை வந்தடைந்தார்.
இலங்கையில் தூதுவராக நியமிக்கப்படுவதற்கு முன்னர், நோர்வேயிலுள்ள அமெரிக்கத் தூதரகத்தில் தூதரக விவகாரங்களுக்கான பொறுப்பாளராகவும், அதற்கு முன்னர் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தில் தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்கள் பணியகத்திற்கான சிரேஷ்ட பணியக அதிகாரியாகவும் அவர் சேவையாற்றினார்.























