Sep 1, 2026 - 10:58 AM





இந்தியாவின் மகாராஷ்டிரா மாநிலத்தில் உணவு மற்றும் மருந்து நிர்வாகத் துறை (FDA) அதிகாரி ஒருவர், காலாவதியான பிஸ்கட்டுகளைத் தின்னுமாறு பொதுமக்களால் மிரட்டப்பட்ட விசித்திரமான சம்பவம் சமூக வலைத்தளங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிராவின் சத்ரபதி சம்பாஜிநகர் பகுதியில் உள்ள ஒரு உள்ளூர் கடையில் வாங்கிய நொறுக்குத் தீனியை சாப்பிட்ட 2 வயதுக் குழந்தைக்கு திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. உடனடியாக அக்குழந்தை சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டது. இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
பாதிக்கப்பட்ட குழந்தையின் குடும்பத்தினரும் அப்பகுதி மக்களும் இதுகுறித்து எஃப்டிஏ (FDA) அலுவலகத்திற்கு புகார் அளித்தனர். புகாரின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த எஃப்டிஏ அதிகாரி அந்த பாக்கெட் கடையில் சோதனையைத் தொடங்கினார்.
இருப்பினும், சோதனை நடப்பதற்கு முன்பே, குழந்தைக்கு பாதிப்பை ஏற்படுத்திய நொறுக்குத் தீனி பாக்கெட்டுகள் கடையிலிருந்து அகற்றப்பட்டுவிட்டதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
அதேநேரம், கடையில் சோதனையிட்டபோது பல காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகள் இருப்பது கண்டறியப்பட்டு அதிகாரியால் பறிமுதல் செய்யப்பட்டது. ஆனால், கடைக்காரர் மீது எந்தவித சட்டப்பூர்வ நடவடிக்கையும் எடுக்கப்படாமல், அந்த அதிகாரி கடைக்காரரிடமிருந்து இலஞ்சம் பெற்றுக்கொண்டு வழக்கை முடிக்க முயன்றதாக மக்கள் குற்றம் சாட்டினர்.
லஞ்சக் குற்றச்சாட்டால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் அந்த அதிகாரியைச் சூழ்ந்துகொண்டு முற்றுகையிட்டனர். பறிமுதல் செய்யப்பட்ட காலாவதியான பிஸ்கட் பாக்கெட்டுகளை அவர் மீது எறிந்து, "இதை நீங்களே சாப்பிடுங்கள்" என்று கத்தினர்.
கோபத்தின் உச்சத்திலிருந்த சிலர், அந்த அதிகாரியின் வாயில் காலாவதியான பிஸ்கட்டுகளை பலவந்தமாக திணிக்கவும் முயன்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் முழுவதும் உணவுப் பாதுகாப்பு மீறல்கள், உணவு கலப்படம் மற்றும் காலாவதியான பொருட்கள் விற்பனைக்கு எதிராக எஃப்டிஏ தீவிர சோதனைகளை நடத்தி வரும் வேளையில், துறையைச் சேர்ந்த அதிகாரியே லஞ்சக் குற்றச்சாட்டில் சிக்கி மக்களால் முற்றுகையிடப்பட்ட இந்தச் சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.























