Sep 5, 2026 - 03:24 PM

தெஹிவளை, ஆர்பன் வீதியில் கடந்த ஓகஸ்ட் 29ஆம் திகதி பெற்றோல் ஊற்றி தீவைத்து நபரொருவர் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தின் பிரதான சந்தேகநபர் கல்கிஸ்ஸை குற்றப் புலனாய்வுப் பணியக அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பணியகத்தின் பொறுப்பதிகாரி பிரதான பொலிஸ் பரிசோதகர் நிலந்த கமகேவுக்கு கிடைத்த இரகசியத் தகவலுக்கு அமையவே இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
படுகொலையின் பின்னர் கண்டிப் பகுதியில் தலைமறைவாகியிருந்த நிலையிலேயே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர் தப்பிச் செல்வதற்குப் பயன்படுத்திய மோட்டார் வாகனத்தையும் பொலிஸார் மீட்டுள்ளனர்.
சுமார் இரண்டு வருடங்களுக்கு முன்னர் தனது தந்தையைக் கொலை செய்தமைக்கு பழிவாங்கும் நோக்கிலேயே இந்த படுகொலையைச் செய்ததாக சந்தேகநபர் பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.
மேலும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 'கொஸ்மல்லி' எனும் பாதாள உலகக் குற்றவாளியின் நெருங்கிய சகா என்பதுடன், கொலையுண்ட நபர் 'படோவிட அஸங்க' என்பவரின் நெருங்கிய சகா என்றும் கூறப்படுகின்றது.
இவர்கள் இருவர் மீதும் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டுகள் நிலுவையில் உள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.





























