Sep 8, 2026 - 06:41 PM

வளிமண்டலவியல் திணைக்களத்தின் இயற்கை அனர்த்தம் தொடர்பான முன்னெச்சரிக்கை பிரிவினால் வெப்பமான வானிலை குறித்த அம்பர் எச்சரிக்கை அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (08) பிற்பகல் 04.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கையானது செப்டம்பர் 09ஆம் திகதி வரை செல்லுபடியாகும் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா, குருநாகல், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்களுக்கும் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை (Heat Index) குறித்த பகுதிகளில் பகல் வேளைகளில் ‘எச்சரிக்கை மட்டம்’ வரை அதிகரிக்கக்கூடும் என்பதால் மக்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
வெப்பச் சுட்டெண் 39 - 45 (எச்சரிக்கை மட்டம்) வரை அதிகரிக்கும் போது அதிக நேரம் வெயிலில் இயங்குவதால் களைப்பு, சோர்வு மற்றும் வெப்பத் தசைப்பிடிப்பு (Heat cramps) என்பன ஏற்படக்கூடும் என திணைக்களம் எச்சரித்துள்ளது.
இச்சுட்டெண் அதிகரித்தால் நீர் இழப்பு மற்றும் வெப்பத்தால் பாரிசவாதம் (Heat stroke) ஏற்படும் அபாயமும் காணப்படுகிறது.
பொதுமக்கள் வேலைத்தளங்களில் போதுமான அளவு நீர் அருந்துவதுடன் சாத்தியமான வேளைகளில் நிழலான பகுதிகளில் ஓய்வெடுக்க அறிவுறுத்தப்படுகிறார்கள்.
அத்துடன் வீடுகளுக்குள் இருக்கும் வயதானவர்களையும் நோயாளிகளையும் கவனமாகப் பார்த்துக்கொள்ளுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
வெளியில் செல்லும்போது அதிக களைப்பை ஏற்படுத்தும் கடினமான நடவடிக்கைகளைக் குறைத்துக்கொள்ள வேண்டும். அத்துடன் இலேசான, வெண்ணிற அல்லது வெளிர் நிற ஆடைகளை அணிவது சிறந்தது என சுகாதார அமைச்சின் ஆலோசனைகளின் அடிப்படையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாகனங்களில் சிறுவர்களை ஒருபோதும் கவனிப்பின்றி தனியாக விட்டுச் செல்ல வேண்டாம் என்றும், கூடுதல் தகவல்களுக்குச் சுகாதார அமைச்சின் அனர்த்தத் தயார்நிலை மற்றும் பதிலிறுத்தல் பிரிவின் 011-7446491 என்ற இலக்கத்தைத் தொடர்பு கொள்ளுமாறும் அறிவிக்கப்பட்டுள்ளது.



























