Sep 8, 2026 - 05:41 PM

இலங்கை முழுவதிலுமுள்ள பாடசாலைகளில் பயன்படுத்தப்படுகின்ற கணினிகள், Projectors, Smart Boards உள்ளிட்ட டிஜிட்டல் கல்விக் கருவிகளைப் பராமரிப்பதையும் பழுதுபார்த்தலையும் முறைப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களுக்குப் பயணச் செலவுகளை வழங்குவதற்கான முறையான வழிமுறை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.
பாராளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் முன்வைத்த வினாவுக்குப் பதிலளிக்கும் போது செப்டம்பர் 8ஆம் திகதி பாராளுமன்றத்தில் பிரதமர் இதனைத் தெரிவித்தார்.
இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்:
"பாடசாலை மட்டத்தில் வன்பொருள் மற்றும் வலையமைப்புப் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக விசேடப் பயிற்சி பெற்ற ஆசிரியர் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதுடன், வட மாகாணத்தின் 13 வலயங்களுக்காக 76 ஆசிரியர்கள் ஏற்கெனவே அப்பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக்குத் தீர்வாக இக்குழுவை மேலும் விரிவுபடுத்தி, 2026 ஒக்டோபர் மாதத்தில் மேலும் ஒரு தொகுதியினருக்கு விசேடப் பயிற்சி வழங்கப்படவுள்ளது. இப்பராமரிப்புப் பணிகளுக்காக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஆசிரியர்களின் பயணச் செலவுகள் மற்றும் கொடுப்பனவுகள் தொடர்பில் நிலவும் பிரச்சினைகளுக்குத் தீர்வாக முறையான கொடுப்பனவு வழிமுறை ஒன்றை உருவாக்குவதற்கும், உரிய அனுமதிகளைப் பெற்றுக்கொள்வதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.
டிஜிட்டல் உள்கட்டமைப்பைப் பழுதுபார்ப்பதற்காகக் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சினால் மாகாணங்களுக்கு மேலதிக நிதி ஒதுக்கீடுகள் வழங்கப்பட்டுள்ளன. அதற்கமைய, 2025 மற்றும் 2026ஆம் ஆண்டுகளுக்காக வடமேல், கிழக்கு மற்றும் வட மாகாணங்கள் உள்ளிட்டவற்றுக்குப் பெருந்தொகையான நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கு மேலதிகமாக, பிரதமரின் நிறைவேற்றுப் பணிக்குழுவுடன் இணைந்து, டிஜிட்டல் கல்வி உள்கட்டமைப்புப் பராமரிப்பு தொடர்பான வழிகாட்டல் கையேட்டைப் புதுப்பித்து, எதிர்காலத்தில் பாடசாலைகளுக்கு அனுப்பிவைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது" என அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், உத்தரவாதக் காலம் (Warranty Period) முடிவடைந்த உபகரணங்களைக் குறைந்தபட்ச விலையில் பழுதுபார்ப்பதற்கும், மாணவர்களையும் இப்பராமரிப்புப் பணிகளுக்காக மாகாண மட்டத்தில் பயிற்றுவிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகப் பிரதமர் மேலும் தெரிவித்தார்.



























