Sep 8, 2026 - 04:30 PM

London South Bank University (LSBU) - UK, Pearson Education Limited மற்றும் SLT-MOBITEL Nebula Institute of Technology ஆகியவற்றுக்கு இடையே ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க முத்தரப்பு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புப் பாதைகளைத் திறந்துவிடும் இந்த மூலோபாயப் பங்காண்மை, இளைஞர் வலுவூட்டலுக்கும் தேசிய முன்னேற்றத்திற்குமான ஒரு வினையூக்கியாக அமைகின்றது.
இந்த உடன்படிக்கை பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு அண்மையில் SLT பணிப்பாளர் சபை மண்டபத்தில் நடைபெற்றது. இதில் London South Bank University) உப வேந்தர் பேராசிரியர் ரொட்னி டே, அப்பல்கலைக்கழகத்தின் சர்வதேசக் கல்விப் பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ரவீந்திரன் சுந்தரராஜன் மற்றும் Pearson தென்னாசியப் பிராந்தியப் முகாமையாளர் சூரியா பிபிலே (Suriya Bibile) உட்பட மூன்று நிறுவனங்களினதும் சிரேஷ்ட பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அத்துடன் SLT-MOBITEL மற்றும் Nebula Institute சார்பில் பிரதம நிறைவேற்று அதிகாரி ரியாஸ் ரஷீத், பிரதம மனிதவள அதிகாரி கலாநிதி நளீன் ஜயசூரிய மற்றும் பிற உயர் அதிகாரிகளும் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.
SLT-MOBITEL நிறுவனத்தின் கல்விப் பிரிவான Nebula Institute of Technology, உள்ளூர் திறமையாளர்களை சர்வதேசக் கல்வித் தரங்களுடன் இணைக்கின்றது. University of Hertfordshire உடன் நிலவிவரும் கூட்டுறவை மேலும் விரிவுபடுத்தி, LSBU மற்றும் Pearson ஆகிய நிறுவனங்களுடான இப்புதிய பங்காண்மையானது, சர்வதேசப் பட்டப்படிப்புகளுக்கான ஒரு நுழைவாயிலாக Nebula Institute இன் பங்கை மேலதிகமாக உயர்த்துகின்றது. அத்துடன், தேசிய அளவிலான திறமை வளர்ச்சிக்கான ஒரு முக்கிய காரணியாகக் கல்வியைப் பயன்படுத்துவதற்கான SLT-MOBITEL இன் அர்ப்பணிப்பையும் இது மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
Pearson இன் நிறுவனசார் பயிலல் மற்றும் திறன்களுக்கான உப தலைவர் ஜேன் பேக்கர் இந்த உடன்படிக்கை குறித்து கலந்துரையாடுகையில், “Pearson, London South Bank University மற்றும் SLT- MOBITEL Nebula Institute of Technology ஆகியவற்றுக்கு இடையிலான இந்த முத்தரப்பு ஒப்பந்தமானது, கற்பவர்களுக்கான தீர்வுகளைக் கண்டறிவதில் ஒன்றிணைந்து செயல்பட மூன்று நிறுவனங்களும் கொண்டுள்ள அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. தொழில்துறை சார்ந்த, மிகவும் பொருத்தமான உயர்கல்வியின் மூலம் மாணவர்கள் தங்களின் திறனை முழுமையாக வெளிப்படுத்துவதற்கான திறன்களை வழங்குதல் எனும் எங்களது தொலைநோக்கினை இந்நிறுவனங்களும் பகிர்ந்துகொள்கின்றன. Pearson undergraduate Higher National qualification என்பது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புடன் இணைத்து, SLT-MOBITEL IoT மாணவர்களுக்கு வழங்குவதற்காகக் கை கோர்ப்பதில் நாங்கள் பெருமிதமும் மகிழ்ச்சியும் அடைகின்றோம்.” என்றார்.
இவ்வொப்பந்தத்தின்படி, உயர் தேசிய பட்டயப் படிப்பை (HND) முடித்த பட்டதாரிகள் உயர்மட்டக் கூடுதல் பட்டப்படிப்புப் பாதைகளை (top-up degree pathways) அணுக முடியும். இது சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட இளங்கலைப் பட்டங்களை அவர்கள் திறம்பட நிறைவு செய்ய வழிவகுக்கின்றது. இதன்கீழ் பின்வரும் பாடநெறிகள் வழங்கப்படுகின்றன: BSc (Hons) Computer Science (Artificial Intelligence)], BSc (Hons) Computer Science (Cyber Security), BSc (Hons) Electrical and Electronic Engineering. மேலும், இக்கற்றல் பாதைகள் SLT ஊழியர்களுக்கும் திறக்கப்பட்டுள்ளன. இது அவர்கள் தங்களின் தற்போதைய திறன்களை மேம்படுத்துவதற்கும் விரிவுபடுத்துவதற்கும் உதவுவதுடன், அவர்களின் தொழில் வாழ்க்கையிலும் எதிர்காலத்திலும் புதிய சாத்தியக்கூறுகளை உருவாக்குவதற்கும் வழிவகுக்கின்றது.
பொறியியல், இணையப் பாதுகாப்பு மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற அதிக தேவைகளுள்ள துறைகளில் கவனம் செலுத்தி, தொழில்துறைக்கு ஏற்ற பாடநெறிகளை வழங்குவதன் மூலம், Nebula Institute டிஜிட்டல் பொருளாதாரத்திற்குத் தேவையான திறன்களுடன் மாணவர்களைச் தயார்படுத்துகின்றது. இதன் மூலம், இலங்கையின் பரந்த டிஜிட்டல் மாற்றம் மற்றும் அறிவுப் பொருளாதாரத்தின் வளர்ச்சிக்கு இந்நிறுவனம் தனது ஆதரவை வழங்குகின்றது.
ஓராண்டு கால பகுதிநேர வாரயிறுதிப் பாடநெறிகளாக வழங்கப்படும் இக்கற்கைத் தெரிவுகள், மேம்பட்ட அறிவை வழங்குவதுடன் வேலைவாய்ப்புத் திறனையும் வலுப்படுத்துகின்றன. இது, மாணவர்கள் நாட்டிலிருந்தவாறே சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட பட்டப்படிப்புகளைத் தொடரவும், உலகளாவிய ரீதியில் பொருத்தமான திறன்களைப் பெறவும் வழிவகுக்கின்றது.
SLT-MOBITEL மனித மூலதன விருத்தி பொது முகாமையாளர் ஜனக சில்வா கருத்துத் தெரிவிக்கையில், “SLT-MOBITEL இல், எதிர்காலத்திற்குத் தயாராகவுள்ள திறமையாளர்களை உருவாக்குவதே டிஜிட்டல் மாற்றம் மற்றும் தேசிய முன்னேற்றத்தை முன்னெடுத்துச் செல்வதற்கு அத்தியாவசியமானது என்பதை நாங்கள் உணர்ந்துள்ளோம். London South Bank University மற்றும் Pearson ஆகிய நிறுவனங்களுடனான இப் பங்காண்மையானது, கற்றலானது தொழில்துறையின் தேவைகளுடன் நெருக்கமாக இணைந்துிருப்பதை உறுதிசெய்யும் அதேவேளையில், சர்வதேச அளவில் அங்கீகரிக்கப்பட்ட தகைமைகளுக்கான அணுகலை விரிவுபடுத்துவதில் ஒரு குறிப்பிடத்தக்க அடியெடுத்து வைப்பாகும். நெபுலா இன்ஸ்டிடியூட் வாயிலாக, விரைவாக வளர்ந்து வரும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சிறந்து விளங்குவதற்குத் தேவையான அறிவு, திறன்கள் மற்றும் உலகளாவிய ஆளுமை ஆகியவற்றுடன் கற்பவர்களை வலுவூட்டும் அர்த்தமுள்ள கற்றல் பாதைகளை உருவாக்க நாங்கள் அர்ப்பணிப்புடன் செயல்படுகின்றோம்.” என்றார்.



























