Sep 9, 2026 - 03:09 PM

கால்பந்தின் உயரிய தனிநபர் விருதாக கருதப்படும் பலோன் டி ஓர் விருதுக்கான 2026 ஆம் ஆண்டின் பரிந்துரைப் பட்டியலில் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார்.
மெஸ்ஸி கடந்த 2006 ஆம் ஆண்டு முதன்முறையாக பலோன் டி ஓர் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டார். தற்போது 2026 ஆம் ஆண்டுக்கான பரிந்துரைப் பட்டியலிலும் மெஸ்ஸி இடம்பெற்றுள்ளார். இதன் மூலம் அவரது முதல் பரிந்துரைக்கும், தற்போதைய பரிந்துரைக்கும் இடையே 20 ஆண்டுகள் இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இதன் மூலம் பலோன் டி ஓர் வரலாற்றில், முதல் மற்றும் சமீபத்திய பரிந்துரைக்கு இடையே அதிக கால இடைவெளி கொண்ட வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி படைத்துள்ளார். இதற்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ 2004 முதல் 2022 வரை 18 ஆண்டுகள் இடைவெளியுடன் முதலிடத்தில் இருந்தார்.
39 வயதில் 2026 ஆம் ஆண்டுக்கான பலோன் டி ஓர் பரிந்துரையைப் பெற்றுள்ளதன் மூலம், 21 ஆம் நூற்றாண்டில் இவ்விருதுக்குப் பரிந்துரைக்கப்பட்ட அதிக வயதான வீரர் என்ற பெருமையையும் மெஸ்ஸி பெற்றுள்ளார். இதற்கு முன்பு கிறிஸ்டியானோ ரொனால்டோ 2022 ஆம் ஆண்டு 37 வயதில் பரிந்துரைக்கப்பட்டதே 21 ஆம் நூற்றாண்டின் சாதனையாக இருந்தது.
பலோன் டி ஓர் விருதை அதிகபட்சமாக 8 முறை வென்ற வீரர் என்ற சாதனையை மெஸ்ஸி தக்கவைத்துள்ளார். அவர் 2009, 2010, 2011, 2012, 2015, 2019, 2021 மற்றும் 2023 ஆகிய ஆண்டுகளில் இந்த விருதை வென்றுள்ளார்.
கிறிஸ்டியானோ ரொனால்டோ 5 முறை பலோன் டி ஓர் விருதை வென்று 2 ஆவது இடத்தில் உள்ளார். அதேவேளையில், ரொனால்டோ 18 பரிந்துரைகளுடன் அதிக முறை பரிந்துரைக்கப்பட்ட வீரர்கள் பட்டியலிலும் முதலிடத்தில் உள்ளார். மெஸ்ஸி 17 பரிந்துரைகளுடன் 2 ஆவது இடத்தில் உள்ளார்.



























