Sep 10, 2026 - 12:37 PM

நுகர்வோரைத் திசைதிருப்பும் வகையில் காலாவதியான பேக்கரி தயாரிப்புகளை விற்பனை செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் அடையாளம் காணப்பட்ட பேக்கரி நிறுவனத்திற்கு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் 200,000 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபையின் புலனாய்வு அதிகாரிகளால் இந்த வழக்குத் தொடரப்பட்டுள்ளதுடன், குறித்த வர்த்தக நிலையத்தில் மேற்கொள்ளப்பட்ட திடீர் பரிசோதனையின்போது, 2026/04/16 என காலாவதித் திகதியிடப்பட்ட ஸ்ட்ராபெரி சுவையூட்டப்பட்ட கிரீம் பன்கள் விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தமை கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நுகர்வோர் விவகார அதிகார சபை குறித்த நிறுவனத்திற்கு எதிராகச் சட்ட நடவடிக்கை எடுத்ததுடன், நேற்று (09) இவ்வழக்கு கொழும்பு பிரதான பிரதான நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இதன்போது, குற்றஞ்சாட்டப்பட்ட நிறுவனம் தம்மீதான குற்றச்சாட்டுக்களை ஒப்புக் கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதனையடுத்து நீதவான் குறித்த நிறுவனத்திற்கு எதிராக 200,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
உணவுப் பொருட்களைக் கொள்வனவு செய்யும் போது அதன் உற்பத்தித் திகதியையும் காலாவதித் திகதியையும் முறையாகச் சரிபார்ப்பது நுகர்வோரின் பொறுப்பாகும் என்பதுடன், இதுபோன்று சட்டவிரோதமான முறையில் காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்கள் குறித்த தகவல்கள் ஏதேனும் இருப்பின், அலுவலக நேரங்களில் 1977 என்ற துரித இலக்கத்தின் ஊடாக நுகர்வோர் விவகார அதிகார சபைக்குத் தெரிவிக்குமாறு அதிகாரிகள் நுகர்வோரிடம் கேட்டுக்கொள்கின்றனர்.





























