Sep 11, 2026 - 12:34 PM

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தை கலைப்பதற்கும், அதன் நிறுவன ஒப்பந்தமான ரோம் சாசனத்திலிருந்து வெளியேறுவதற்கும் ஆதரவளிக்குமாறு தனது நேட்டோ நட்பு நாடுகளை அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது.
நேட்டோ அமைப்பின் பிரதிநிதிகளுக்கு அமெரிக்கா அண்மையில் அனுப்பியுள்ள ஆவணத்தில், ரோம் சாசனத்திலிருந்து விலகுவதற்கான உடனடி நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்ற கட்டமைப்பை "திட்டமிட்டு கலைக்க" அமெரிக்கா விரும்புவதாகவும் அந்த ஆவணத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தங்களுக்கு ஏற்படுத்தும் அச்சுறுத்தல்களை நேட்டோ நாடுகள் ஆராய வேண்டும் என்றும், நீதிமன்றத்தின் வரம்பு மீறல்களைப் பகிரங்கமாக விமர்சிக்க வேண்டும் என்றும் கோரப்பட்டுள்ளது.
அத்துடன், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்துக்கு வழங்கி வரும் அனைத்து விதமான உதவிகள் மற்றும் ஆதரவுகளை உடனடியாக நிறுத்த வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கடந்த ஜூலை மாதம் பிரஸ்ஸல்ஸில் நேட்டோ அமைப்பின் 32 தூதுவர்கள் பங்கேற்ற மூடிய அறைக் கூட்டத்தில் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
நேட்டோவுக்கான அமெரிக்க தூதுவர் மேத்யூ விட்டேக்கர் இது குறித்துப் பேசுகையில், "அமெரிக்காவின் பக்கம் யார் நிற்கிறார்கள் என்பதை நாங்கள் உன்னிப்பாகக் கவனிப்போம்" என்று நட்பு நாடுகளை எச்சரிக்கும் தொனியில் தெரிவித்தார்.
எனினும், பிரான்ஸ் மற்றும் நெதர்லாந்து ஆகிய நாடுகள் அமெரிக்காவின் இந்த நிலைப்பாட்டை ஏற்க மறுத்து, கூட்டத்தில் சர்வதேச ஆதரவாகப் பேசியிருந்தன.
நேட்டோ ஒரு தனி அமைப்பாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் உறுப்பினராக இல்லை. எனினும், அமெரிக்கா மற்றும் துருக்கியைத் தவிர ஏனைய அனைத்து நேட்டோ நாடுகளும் இதன் உறுப்பு நாடுகளாக உள்ளன.
அமெரிக்காவின் இறையாண்மையில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் தலையிடுவதாகக் கூறி, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ இந்த நடவடிக்கைகளைத் தீவிரப்படுத்தியுள்ளார்.
இதனிடையே, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் தலைவர் டோமோகோ அகானே உட்பட பல சிரேஷ்ட அதிகாரிகள் மீது அமெரிக்கா கடந்த மாதம் தடைகளையும் விதித்தது.
போர்க்குற்றங்கள் மற்றும் இனப்படுகொலைகளை விசாரிக்க 2002 ஆம் ஆண்டில் சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் உருவாக்கப்பட்டது.
2020ஆம் ஆண்டில் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவத்தின் மீதான போர்க் குற்றச்சாட்டுகளை சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் விசாரிக்கத் தொடங்கியதிலிருந்து இந்த மோதல் உருவானது.
ஈரான் மீதான போர் மற்றும் கிரீன்லாந்து விவகாரத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் விடுத்த அச்சுறுத்தல்கள் போன்றவற்றால் அமெரிக்காவுக்கும் ஐரோப்பிய நாடுகளுக்கும் இடையிலான உறவு ஏற்கனவே சற்றே பதற்றமாக உள்ள நிலையில், தற்போதைய இந்த சர்வதேச குற்றவியல் நீதிமன்ற விவகாரம் மேலும் சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.





























