Sep 15, 2026 - 04:10 PM

கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் கீழ், நிறுவனம் ஒன்றை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக பெயரிடுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
பிரைம் மெல்வா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனத்திற்கு கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் விதிகளை பின்பற்றி, முன்மொழியப்பட்டுள்ள விலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும், அந்நிறுவனத்தை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக பெயரிடுவதற்கும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற ரீதியில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை இவ்வாறு அனுமதி அளித்துள்ளது.
2021 ஆம் ஆண்டின் 11 ஆம் இலக்க கொழும்பு துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டத்தின் 53 ஆம் பிரிவின்படி, வணிகம் ஒன்றை மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த வணிகமாக பெயரிடுவதற்கும், அத்தகைய வணிகங்களுக்கு விலக்குகள் அல்லது ஊக்குவிப்புகளை வழங்குவதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதுடன், அதற்கு அமைச்சரவையின் அனுமதி அவசியமாகும்.
அதன்படி, மூலோபாய முக்கியத்துவம் வாய்ந்த முதன்மை வணிகமாக பெயரிட முன்மொழியப்பட்டுள்ள பிரைம் மெல்வா (பிரைவேட்) லிமிட்டெட் நிறுவனம் எதிர்வரும் சில ஆண்டுகளில் 112.2 மில்லியன் அமெரிக்க டொலர் மற்றும் 15.9 பில்லியன் இலங்கை ரூபாயை முதலீடு செய்யவும், கொழும்பு துறைமுக நகரத்திற்குள் கலப்பு பயன்பாட்டு நீர்க்கரை அபிவிருத்தி திட்டத்தை (Landmark mixed-use waterfront project) நடைமுறைப்படுத்தவும், அதன் மூலம் சுமார் 800 பேருக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் திட்டமிட்டுள்ளது.





























