Sep 16, 2026 - 02:08 PM

நுவரெலியா கல்வி வலயத்திற்குட்பட்ட நு/டெஸ்போட் தமிழ் மகா வித்தியாலயத்தில், மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான இடவசதியை மேம்படுத்தும் வகையில், இரண்டு மாடிகளைக் கொண்ட புதிய பாடசாலைக் கட்டடம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (16) நடைபெற்றது.
பாடசாலை அதிபர் பழனிவேல் சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில், சமய வழிபாடுகளும் விசேட பூஜைகளும் இடம்பெற்றன.
இதனைத் தொடர்ந்து, புதிய கட்டடத்திற்கான அடிக்கல்லை அதிதிகள் நாட்டி வைத்தனர்.
தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கல்வி அமைச்சினால் ஒதுக்கப்பட்ட 2 கோடி ரூபாய் நிதியுதவியின் கீழ், இந்த இரு மாடிக் கட்டடம் நிர்மாணிக்கப்படவுள்ளது.
மாணவர்களின் கல்வி நடவடிக்கைகளுக்குத் தேவையான பல அடிப்படை வசதிகளுடன் கூடியதாக இப்புதிய கட்டடம் அமைக்கப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீண்டகாலமாக நிலவிவந்த பாடசாலையின் இடவசதிப் பிரச்சினைக்கு இப்புதிய கட்டட நிர்மாணப் பணிகள் சிறந்த தீர்வாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட அமைப்பாளர் மூக்கையா பாஸ்கரன், நுவரெலியா வலையக் கல்வித் திணைக்கள அதிகாரி வீரன் விஜயகுமார் உள்ளிட்ட அதிதிகள், ஆசிரியர்கள், கல்விசாரா ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்.
புதிய கட்டடத்தின் நிர்மாணப் பணிகள் நிறைவடைந்த பின்னர், பாடசாலையின் கற்றல் செயற்பாடுகளுக்கு மேலதிக இடவசதி கிடைப்பதுடன், மாணவர்களுக்குச் சிறந்த கற்றல் சூழலும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.





























