Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
நாமலுக்கு எதிரான வழக்கில் இன்றைய வாத பிரதிவாதங்களின் முழு விபரம்

Sep 18, 2026 - 06:34 PM

நாமலுக்கு எதிரான வழக்கில் இன்றைய வாத பிரதிவாதங்களின் முழு விபரம்
Mobitel Inner 1278

100 மில்லியன் ரூபாய் இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவின் பிணை கோரிக்கை மீதான உத்தரவு எதிர்வரும் 29 ஆம் திகதி அறிவிக்கப்படும் என கொழும்பு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

அதுவரை சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷவை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதிவான் அஸங்க எஸ். போதரகம உத்தரவிட்டார். 

இப்பிணைக் கோரிக்கை தொடர்பான பிரதிவாதி தரப்பின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை எதிர்வரும் 22 ஆம் திகதியும், முறைப்பாட்டாளரின் எழுத்துப்பூர்வ சமர்ப்பணங்களை 25 ஆம் திகதியும் தாக்கல் செய்யுமாறு நீதிவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு உத்தரவிட்டார். 

இவ்வழக்கு இன்று (18) விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போது, இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு சார்பில் ஆஜரான பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், "மாண்புமிகு நீதிபதி அவர்களே... இந்த இலஞ்ச குற்றச்சாட்டோடு தொடர்புடைய மற்றொரு வழக்குக்காக இச்சந்தேகநபர் முன்தினம் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான வழக்குக்காகவே அவர் கோட்டை நீதிவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டார். இச்சம்பவத்தின் கீழ் இலஞ்சக் குற்றச்சாட்டு மற்றும் பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழான குற்றச்சாட்டுகள் ஆகிய இரண்டும் வெளிப்பட்டுள்ளதால், இந்த விசாரணையை இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவும் குற்றப் புலனாய்வுத் திணைக்களமும் இணைந்து மேற்கொண்டு வருகின்றன. ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய இவ்வாறான விசாரணைக்கு சட்டமா அதிபரின் உதவியைப் பெறுவதற்கும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு இயலுமை உள்ளது" எனத் தெரிவித்தார். 

விசாரணைகளின் மேலதிக முன்னேற்றம் குறித்து நீதிமன்றத்திற்குத் தெரிவித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, "மாண்புமிகு நீதிபதி அவர்களே, இவ்விசாரணைக்கு அமைவாக முன்னாள் சபாநாயகர் சமல் ராஜபக்ஷவிடம் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு வாக்குமூலம் பதிவு செய்துள்ளது. சபாநாயகரின் உத்தியோகபூர்வ இல்லத்தில் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பணிப்பாளர் சபைக் கூட்டம் நடத்தப்பட்டமை தொடர்பாகவும், ஷமிந்திர ராஜபக்ஷ என்ற சந்தேகநபர் வெளிநாடு சென்றுள்ளமை தொடர்பாகவும் சமல் ராஜபக்ஷவிடம் வாக்குமூலம் பெறப்பட்டது. தவிர, சுசந்த சமிந்த ரத்நாயக்க மற்றும் திமுது சஞ்சய ஆகிய இருவரிடமும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இது 2012 ஆம் ஆண்டு வரையிலான விசாரணையாகும். இச்சம்பவத்தின் முதல் சந்தேகநபரான கபில சந்திரசேன தற்போது உயிரிழந்துள்ளார். இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். மூன்றாவது சந்தேகநபரான ஷமிந்திர ராஜபக்ஷவும் அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுள்ளார். தவிர, சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ மற்றும் சாட்சியாளரான நிமல் பெரேரா ஆகியோர் இருக்கும் புகைப்படங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. அதன் ஊடாகவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றன. இச்சந்தேகநபருக்கு எதிராக ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் 149 ஆம் பிரிவுக்கு அமைய இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தினால் சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சான்றிதழ் சமர்ப்பிக்கப்பட்டுள்ள நிலையில், உங்களது நீதிமன்றத்தால் பிணை வழங்கப்பட வேண்டுமெனின் விசேட காரணங்கள் முன்வைக்கப்படும் போது மட்டுமே முடியும். கடந்த தடவை சந்தேகநபரின் சட்டத்தரணிகளால் முன்வைக்கப்பட்ட காரணங்கள் விசேட காரணங்கள் அல்ல எனத் தீர்மானித்து நீங்கள் பிணை மனுவை நிராகரித்திருந்தீர்கள்" எனக் கூறி, இச்சந்தேகநபரை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு கோரினார். 

இதன்போது பிரதி சொலிசிட்டர் ஜெனரலிடம் வினவிய நீதிவான், "இவ்வழக்கின் இரு சந்தேகநபர்கள் தொடர்பில் இந்நீதிமன்றத்தால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டது. அது தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?" எனக் கேட்டார். 

அதற்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல், "தற்போது அமெரிக்காவுக்குத் தப்பிச் சென்றுள்ள ஷமிந்திர ராஜபக்ஷ என்ற சந்தேகநபருக்கு எதிராகப் பிறப்பிக்கப்பட்ட பிடியாணைக்கு அமைய, சர்வதேச பொலிஸ் (இன்டர்போல்) ஊடாக சிவப்பு அறிவித்தல் விடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தவிர, அவுஸ்திரேலியாவுக்குத் தப்பிச் சென்றுள்ள இரண்டாவது சந்தேகநபரான பிரியங்கா நியோமாலி விஜேநாயக்க தொடர்பில் சிவப்பு அறிவித்தலைப் பெறுவதற்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்நடவடிக்கைகளை விரைவாக முடிப்பதற்கு சந்தேகநபர்களுக்கு எதிராகக் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இச்சம்பவத்துடன் தொடர்புடைய விசாரணை கோப்புகளை சட்டமா அதிபர் திணைக்களத்திடம் சமர்ப்பித்துள்ளது. அவற்றை நாங்கள் ஆராய்ந்து வருகிறோம். எனவே விசாரணைகளை விரைவாக முடித்து, அனைத்து சந்தேகநபர்களுக்கும் எதிராக விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய எதிர்பார்க்கிறோம்" என்றார். 

அதன்பின்னர் சந்தேகநபர் நாமல் ராஜபக்ஷ சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சவீந்திர பெர்னாண்டோ நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைக்கையில், "மாண்புமிகு நீதிபதி அவர்களே, கடந்த தடவை விசேட காரணங்கள் இல்லை எனத் தீர்மானித்து சந்தேகநபரின் பிணை மனுவை நிராகரித்திருந்தீர்கள். ஆனால் அதற்குப் பின்னரும் இச்சந்தேகநபர் தொடர்பில் விசேட காரணங்கள் உருவெடுத்துள்ளன. ஏர்பஸ் கொடுக்கல் வாங்கல் தொடர்பில் சர்வதேச மட்டத்தில் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின் எந்தவொரு இடத்திலும் இச்சந்தேகநபரின் பெயர் குறிப்பிடப்படவில்லை. நிமல் பெரேரா என்பவர் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் மட்டுமே இச்சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியாவில் இருக்கும் நிமல் பெரேரா ஒரு சந்தர்ப்பத்தில் வாக்குமூலம் அளிக்கையில், இப்பணம் தனது கணக்கிற்கு வரவில்லை எனத் தெரிவித்திருந்தார். மேலும் நிமல் பெரேரா பொய் வாக்குமூலம் அளித்ததாக ஒரு சந்தர்ப்பத்தில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் B-அறிக்கைகள் மூலம் சுட்டிக்காட்டியிருந்தது. இச்சம்பவத்துடன் தொடர்புடையதாகக் கூறப்படும் இலஞ்சப் பணம் நிமல் பெரேராவின் கணக்கிற்கு வந்திருந்தால், அவர் குற்றத்திற்குத் துணைபோனவராகப் பெயரிடப்பட வேண்டும். தவிர, விளக்கமறியலில் இருக்கும் இச்சந்தேகநபருக்கு இந்திய அரசாங்கத்திடமிருந்து இந்தியாவுக்கான விஜயத்தை மேற்கொள்வதற்காக அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அவர் விளக்கமறியலில் இருப்பதால் அந்த விஜயத்தையும் ரத்து செய்ய நேரிட்டுள்ளது. இதனையும் ஒரு விசேட காரணமாகக் கருதுமாறு கேட்டுக்கொள்கிறேன். தவிர, எதிர்வரும் நாட்களில் ஹிங்குரக்கொட வருடாந்த எசல பெரஹரா நடைபெறவுள்ளது. இந்த பெரஹரா கண்டி தலதா பெரஹராவுக்கு அடுத்தபடியாக விளங்குவதாகும். அந்த பெரஹரா நடைபெறும் நாளில், அதாவது செப்டெம்பர் மாதம் 26 ஆம் திகதி இரவு 7.42 மணிக்கு ஹிங்குரக்கொட விகாரையின் கொடியை பிரதிஷ்டை செய்வதற்காக விகாராதிபதியால் இச்சந்தேகநபருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. ஆனால் இச்சந்தேகநபர் விளக்கமறியலில் இருப்பதால் அந்தப் பணியையும் செய்ய முடியாது போகிறது. அது அழைப்பு விடுத்த விகாராதிபதிக்கு செய்யும் அவமரியாதையாகும்" எனக் கூறி, இக்காரணங்களை விசேட காரணங்களாகக் கருதி சந்தேகநபருக்குப் பிணை வழங்குமாறு கோரினார். 

அப்பிணை கோரிக்கைக்குப் பதிலளித்த பிரதி சொலிசிட்டர் ஜெனரல் ஜனக பண்டார, "மாண்புமிகு நீதிபதி அவர்களே... நிமல் பெரேரா என்பவரின் நம்பகத்தன்மை குறித்து கடந்த தடவை நீங்கள் உத்தரவு பிறப்பித்திருந்தீர்கள். அந்தச் சாட்சியாளரின் நம்பகத்தன்மை குறித்து வழக்கு விசாரணையின் போதே தீர்மானிக்க முடியும். இந்த சந்தர்ப்பத்தில் அதனைப் பரிசீலிக்க முடியாது. அதனால் அதனை விசேட காரணமாகக் கருத முடியாது. இந்திய விஜயம் மற்றும் விகாரையின் கொடியைப் பிரதிஷ்டை செய்தல் தொடர்பாக முன்வைக்கப்பட்ட காரணங்களையும் விசேட காரணங்களாகக் கருத முடியாது. அண்மையில் உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனக் டி சில்வா ஒரு தீர்ப்பை வழங்கியிருந்தார். அத்தீர்ப்பில் பௌத்த தத்துவத்திற்கு அமைய ஊழலிலிருந்து விலகிச் செயல்பட வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டுள்ளது. அங்குத்தர நிகாய மற்றும் சூத்திர பிடகத்தின் அடிப்படையில் நீதியரசர் பௌத்த தத்துவத்திற்கு அமைவாக ஊழலிலிருந்து தவிர்வதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டியுள்ளார். தர்மத்திற்கு அமைவாகச் செயல்படும் நிலை ஏற்பட்டால் நல்லது. ஆனால் இக்காரணங்களை விசேட காரணங்களாகக் கருத முடியாது. 'வெலிகம பே' என்ற சம்பவம் தொடர்பாகவும் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகிறது. அங்கேயும் ரூபா 175 மில்லியனுக்கும் அதிகமான சந்தேகத்திற்கிடமான பணம் கிடைத்தமை பற்றிய தகவல்கள் வெளிவந்துள்ளன. அப்பணமும் நிமல் பெரேராவின் கணக்கிற்கே வந்துள்ளது" எனக் கூறி, இந்த சந்தர்ப்பத்தில் விளக்கமறியலில் உள்ள சந்தேகநபரான நாமல் ராஜபக்ஷ தொடர்பில் விசேட காரணங்கள் எதுவும் முன்வைக்கப்படவில்லை எனத் தெரிவித்தார். 

இரு தரப்புச் சமர்ப்பணங்களையும் பரிசீலித்த நீதிவான், நாமல் ராஜபக்ஷவை தொடர்ந்து விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிட்டார்.


MOST READ

காணொளி
யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழில் பட்டதாரிகள் நூதன போராட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

யாழ். ஆளுநர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

மட்டக்குளி வீதி விபத்தில் தந்தையை இழந்து தவிக்கும் குடும்பம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

யாழ். கல்லூண்டாய் பகுதியில் பதற்றம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

வடமாகாண சுகாதார அமைச்சு நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

நாங்கள் அரச திட்டங்களில் தொடர்ந்தும் புறக்கணிக்கப்படுகிறோம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

இந்திய நிதியுதவியில் புதிய மருத்துவ கட்டடம்!

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

மன்னார் வைத்தியசாலையில் புதிய விபத்துச் சிகிச்சைப் பிரிவு

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

சம்மாந்துறையில் தீவிரமடையும் காட்டு யானைகளின் அட்டகாசம்!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

நீதிமன்றத்தின் அதிரடி உத்தரவு!

Mobitel 1278