Sep 20, 2026 - 10:24 PM

அண்மையில் ஏற்பட்ட 'டித்வா' புயல் காரணமாக, 150 தேசிய பாடசாலைகள் மற்றும் 7 தேசிய கல்வியியற் கல்லூரிகளுக்கு 227 கோடி ரூபாவுக்கும் அதிகமான நட்டம் ஏற்பட்டுள்ளதாகப் புதிய கணக்காய்வு அறிக்கையொன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அனர்த்தத்தினால் ஏற்பட்ட நட்டமானது 2,274,230,000 ரூபாய் என அமைச்சின் பொறியியல் பிரிவினால் மதிப்பிடப்பட்டுள்ளதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும், இது தொடர்பில் நிதி அறிக்கைகளில் அடையாளப்படுத்தப்படவோ அல்லது வெளிப்படுத்தப்படவோ இல்லை எனவும் குறித்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, நாடளாவிய ரீதியிலுள்ள பாடசாலைகள், தேசிய கல்வியியற் கல்லூரிகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி கலாசாலைகள் போன்றவற்றின் உட்கட்டமைப்பு அபிவிருத்தி தொடர்பான பிரதான பொறுப்பு பொறியியல் பிரிவிடமே ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இதற்கமைவாக, 2025 ஆம் ஆண்டில் 41 நிர்மாணப் பணிகளுக்காக 8,432,290,000 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும் குறித்த கணக்காய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனினும், குறித்த வருடத்திற்குள் மேற்படி செயற்றிட்டங்கள் ஊடாக எட்டப்பட்ட முன்னேற்றங்களை ஆராய்ந்தபோது, 10 செயற்றிட்டங்கள் முற்றாக முன்னெடுக்கப்படாமலும், 16 செயற்றிட்டங்களின் பௌதீக முன்னேற்றம் 50 சதவீதத்திற்கும் குறைவாகக் காணப்பட்டதாகவும் கணக்காய்வு அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.





























