Sep 22, 2026 - 08:08 AM

21 கிலோவுக்கும் அதிகளவிலான 'ஐஸ்' போதைப்பொருளுடன் பெண் ஒருவர் உள்ளிட்ட இருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில் மேலும் பல தகவல்கள் வௌியாகியுள்ளன.
ஹம்பாந்தோட்டை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவின் உத்தியோகத்தர்கள் குழுவினால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர்கள் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர், உதவி பொலிஸ் அத்தியாட்சகர் எஃப்.யு. வூட்லர் தெரிவித்தார்.
மாத்தறை, வல்கம பகுதியில் உள்ள வீடொன்றில் நேற்று (21) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனையின் போது, அவ்வீட்டிலிருந்து 21 கிலோ 810 கிராம் ஐஸ் போதைப்பொருள் கைப்பற்றப்பட்டது.
அத்துடன் போதைப்பொருள் வியாபாரம் மூலம் ஈட்டப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 5 இலட்சம் ரூபாய் பணமும் மீட்கப்பட்டது.
சந்தேகநபர்களிடமிருந்த கார் ஒன்று, மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் 3 கைபேசிகளையும் பொலிஸார் பறிமுதல் செய்துள்ளனர்.
கைதானவர்களை தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கான உத்தரவுகளைப் பெற்று மாத்தறை மாவட்ட குற்றத்தடுப்புப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.
இன்னும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருளின் பெறுமதி மதிப்பிடப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.





























