Sep 21, 2026 - 10:38 PM

மேற்கு - மத்திய மற்றும் அதனை அண்மித்த மத்திய- கிழக்கு வங்காள விரிகுடாவில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வு பிரதேசம், இன்று (21) மாலை 5:30 மணியளவில் மேற்கு -மத்திய மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு வங்காள விரிகுடா பகுதியில் தாழமுக்கமாக வலுவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அடுத்த 24 மணித்தியாலங்களில் இது மேலும் வலுவடைந்து, வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெற்கு ஒடிசா கடலோரப் பகுதிகள் ஊடாக கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
வங்காள விரிகுடா கடல் பகுதியில் நிலவும் வானிலை நிலைமை காரணமாக, அடுத்த 12 மணித்தியாலங்களுக்கு செல்லுபடியாகும் வகையில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்பு தொடர்பான முன் எச்சரிக்கை அறிவித்தலை வெளியிட்டு வளிமண்டலவியல் திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.
இந்த அறிவித்தல் முக்கியமாக வங்காள விரிகுடாவின் ஆழ்கடல் பகுதியில் பயணிக்கும் பலநாள் மீன்பிடி படகுகளின் தீவிர அவதானத்திற்காக வெளியிடப்பட்டுள்ளது.
இக் கடற்பரப்புகளில் காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 55 - 65 கி.மீ வரை அதிகரிக்கக்கூடும் என்பதுடன், கடல் அவ்வப்போது கொந்தளிப்பாகவோ அல்லது மிகவும் கொந்தளிப்பாகவோ காணப்படலாம்.
இடியுடன் கூடிய பலத்த மழையின் போது காற்றின் வேகம் அவ்வப்போது மணிக்கு 70 கி.மீ வரை உயரக்கூடும் என்பதுடன், அக் கடற்பரப்புகள் மிகவும் கொந்தளிப்பான நிலையை அடையும்.
வடக்கு அட்சரேகை 5 இற்கும் 22 இற்கும் இடையிலும், கிழக்கு தீர்க்கரேகை 85 இற்கும் 100 இற்கும் இடையிலும் உள்ள கடற்பரப்புகளில் மறுஅறிவித்தல் வரை மீன்பிடி மற்றும் கடற்படை நடவடிக்கைகளில் ஈடுபடுவதை முழுமையாகத் தவிர்க்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஏற்கனவே இப் பகுதிகளில் மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர்கள் உடனடியாக அக் கடற்பரப்புகளிலிருந்து வெளியேறுமாறு அதிகாரிகள் பலமாகக் கேட்டுக்கொள்கின்றனர்.





























