Sep 23, 2026 - 06:39 AM

இலங்கைக்கு வடகிழக்கே வடமேற்கு வங்கக்கடலில் நிலைகொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.
இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலத்தின் நேரடித் தாக்கம் இலங்கைக்கு இல்லாவிட்டாலும், அந்த அமைப்புக்கு வீசும் காற்று சுழற்சி காரணமாக நாட்டின் தென்மேற்குப் பகுதியில் நிலவும் மழை நிலைமை மேலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன்படி, மேல், சப்ரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என்பதுடன், சில இடங்களில் 100 மி.மீ-க்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
வடமத்திய மாகாணத்திலும் மன்னார் மாவட்டத்திலும் பல முறை மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளிலும், வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும் திருகோணமலை, அம்பாந்தோட்டை மற்றும் மாத்தளை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-50 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
இடிமின்னலுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் ஏற்படக்கூடிய தற்காலிக பலத்த காற்று மற்றும் மின்னல் தாக்கங்களினால் ஏற்படும் விபத்துக்களை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களைக் கேட்டுக்கொள்கிறது.





























