Sep 23, 2026 - 01:51 PM

2026 செப்டெம்பர் 19 அன்று Araliya Green Hills ஹோட்டலில் நடைபெற்ற NextGen Skills விருது வழங்கும் நிகழ்வு மற்றும் மாணவர் திறன் வெளிப்பாட்டு நிகழ்வில் மூன்று தமிழ் மொழிமூல பெருந்தோட்டப் பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தினர். உரை நிகழ்த்துதல், நாடகம் மற்றும் நடனம் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகள் ஊடாக, முன்னோடித் திட்டத்தின் போது தாங்கள் வளர்த்துக்கொண்ட நம்பிக்கை, படைப்பாற்றல் மற்றும் குழுவாகச் செயற்படும் திறன்களை மாணவர்கள் வெளிப்படுத்தினர். இத்திட்டத்தில் பங்கேற்ற 100 இற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கப்பட்டதுடன், Peer Group Leaders, ஆசிரியர் மேற்பார்வையாளர்கள், பாடசாலைத் தலைவர்கள் மற்றும் கல்விப் பங்காளர்களும் அவர்களது பங்களிப்புகளுக்காக கௌரவிக்கப்பட்டனர்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, மத்திய மாகாணக் கல்வித் திணைக்களம், நுவரெலியா வலயக் கல்வி அலுவலகம் மற்றும் பங்கேற்ற மூன்று பாடசாலைகளான ஹோல்புரூக் தமிழ் மகா வித்தியாலயம், அக்கரப்பத்தனை தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் சௌமியமூர்த்தி தொண்டமான் கல்லூரி ஆகியவற்றின் ஆதரவுடன் முன்னெடுக்கப்பட்ட, பிரிட்டிஷ் கவுன்சிலின் NextGen Skills முன்னோடித் திட்டத்தின் முக்கிய கட்டமாக இந்நிகழ்வு அமைந்திருந்தது.
பிரிட்டிஷ் கவுன்சிலின் பெண்களை மையமாகக் கொண்ட English for Digital and Girls Education (EDGE) திட்டத்தின் கற்றல்களை அடிப்படையாகக் கொண்டு NextGen Skills, இலங்கைச் சூழலுக்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இத்திட்டம், பாலின வேறுபாடின்றி அனைத்து மாணவர்களும் பங்கேற்கும் வகையிலும், மாணவர்களால் வழிநடத்தப்படும் பாடசாலை நேரத்திற்குப் பின்னரான கழகச் செயற்பாடுகளைக் கொண்டதாகவும் அமைந்திருந்தது. இம்முன்னோடித் திட்டத்தில் 12 முதல் 15 வயதுக்கு இடைப்பட்ட 142 மாணவர்கள், பெரும்பான்மையாகப் பங்கேற்றதுடன், அவர்களில் 43 மாணவர்கள் Peer Group Leaders ஆகவும் பயிற்றுவிக்கப்பட்டனர்.
நடைமுறைச் செயற்பாடுகள் ஊடாக மாணவர்கள் ஆங்கிலத் தொடர்பாடல், டிஜிட்டல் அறிவு, சமூக-உணர்வுத் திறன்கள், தலைமைத்துவம் உள்ளிட்ட பல்வேறு வாழ்க்கைத் திறன்களை வளர்த்துக்கொண்டனர். Peer Group Leaders, செயற்பாடுகளை வழிநடத்தவும், ஏனைய மாணவர்களின் பங்கேற்பை ஊக்குவிக்கவும், மாணவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்வதற்கான சூழலை உருவாக்கவும் ஆதரவளித்தனர்.
தமது பயணம் தொடர்பாக கருத்துத் தெரிவித்த பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் ஆங்கிலம் மற்றும் பாடசாலைக் கல்விப் பிரிவின் தலைவர் அஞ்சு மோசஸ், பல மாணவர்கள் ஆரம்பத்தில் அமைதியாகவும் தன்னம்பிக்கையற்றவர்களாகவும் இத்திட்டத்தில் இணைந்ததாகக் குறிப்பிட்டார். எனினும், காலப்போக்கில் அவர்கள் தன்னம்பிக்கையுடன் பங்கேற்கவும், நண்பர்களை உருவாக்கவும், தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கவும், தமது கருத்துகளை வெளிப்படுத்தவும் ஆரம்பித்தனர். இவ்வாறாக, தங்களைப் பற்றிய அவர்களது பார்வையே மாறத் தொடங்கியமைதான் “NextGen Skills இன் உயிர்நாடி” என அவர் குறிப்பிட்டார். இத் திட்டத்தின் முதல் தலைமுறையாக விளங்கும் இம்மாணவர்களின் அனுபவங்களும் சாதனைகளும், ஏனைய மாணவர்களுக்கும் இதுபோன்ற வாய்ப்புகளை உருவாக்குவதற்கான வழியைத் திறக்கும்.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி பிரதி அமைச்சர் Dr. மதுர செனவிரத்ன கூறுகையில்:
“கற்றல் செயற்பாடுகளில் சுறுசுறுப்பாக பங்கேற்கும் வாய்ப்பையும் நம்பிக்கையையும் மாணவர்களுக்கு வழங்கும்போது எப் பின்னணியைச் சேர்ந்த சமூகங்களிலும் மாற்றங்களை ஏற்படுத்த முடியும் என்பதை NextGen Skills முன்னோடித் திட்டம் எடுத்துக்காட்டுகிறது. ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் திறன்களுடன் குழுவாகச் செயற்படுதல், தன்னம்பிக்கை மற்றும் சக மாணவர் தலைமைத்துவம் ஆகியவற்றை ஒருங்கிணைப்பதன் ஊடாக மேலும் சமத்துவமான, பொருத்தமான மற்றும் அனைவரையும் உள்ளடக்கிய கல்விக்கான எமது முன்னுரிமைகளுக்கு இத்திட்டம் ஆதரவளிக்கிறது. இது போன்ற அணுகுமுறைகள், இலங்கை முழுவதும் அதிகமான மாணவர்களுக்கான வாய்ப்புகளை உருவாக்குவதில் எவ்வாறு பங்களிக்கக்கூடும் என்பதை நாம் ஆராய்ந்து வரும் நிலையில், இக் கூட்டாண்மை ஊடாகப் பெறப்படும் கற்றல்களை நாம் வரவேற்கிறோம்.” என்றார்.
பிரிட்டிஷ் கவுன்சில் இலங்கையின் நாட்டுப் பணிப்பாளர் கிளேர் சியர்ஸ் கூறுகையில்:
“NextGen Skills, பிரிட்டிஷ் கவுன்சிலின் பணிகளில் முக்கியமான ஒரு விடயத்தைப் பிரதிபலிக்கிறது. ஆங்கிலம் என்பது கற்றுக்கொள்ள வேண்டிய ஒரு பாடம் மாத்திரமல்ல; இளைஞர்கள் தமது கருத்துகளை வெளிப்படுத்தவும், தொடர்புகளை உருவாக்கவும், புதிய வாய்ப்புகளைப் பெற்றுக்கொள்ளவும் உதவும் ஒரு கருவியாகும். மாணவர்களை வெறுமனே பயனாளர்களாகப் பார்க்காமல், பங்களிப்பாளர்களாகவும் அங்கீகரிப்பதன் மூலம் மாணவர்கள் ஒருவரிடமிருந்து ஒருவர் கற்றுக்கொள்ளவும் தமது அனுபவங்களைப் பகிர்ந்துகொள்ளவும் Peer-led அணுகுமுறை வாய்ப்பை ஏற்படுத்துகிறது.”
நுவரெலியா வலயக் கல்வி அலுவலகத்தின் ஆங்கிலத்திற்கான உதவிக் கல்விப் பணிப்பாளர் –டம்மிக கோதா பத்திரன, இம் மூன்று பாடசாலைகளிலும் கிடைத்த அனுபவம், மாணவர்களை மையமாகக் கொண்ட அணுகுமுறைகளின் முக்கியத்துவத்தை எடுத்துக்காட்டுவதாகத் தெரிவித்தார். சக மாணவர்களிடையிலான கற்றலை, ஆங்கிலம் மற்றும் டிஜிட்டல் திறன்களின் இலக்குவைத்த மேம்பாட்டுடன் இணைக்கும் இத்தகைய அணுகுமுறைகள் மாணவர்களின் மேற்படிப்பு, எதிர்கால வேலைவாய்ப்பு மற்றும் சமூகத்தில் அவர்களின் ஆர்வமான பங்கேற்புக்கு முக்கியமானவை எனவும் அவர் குறிப்பிட்டார்.
ஆரம்ப கட்ட கண்காணிப்பின் போது ஊக்கமளிக்கும் போது, மாணவர்களின் தன்னம்பிக்கை, ஆங்கிலப் பயன்பாடு, பங்கேற்பு, ஒத்துழைப்பு மற்றும் தலைமைத்துவப் பொறுப்புகளை ஏற்கும் ஆர்வம் ஆகியவற்றில் மாற்றங்கள் பதிவாகின. மேலும், மாணவர்களால் வழிநடத்தப்படும் இத்தகைய அணுகுமுறை பாதுகாப்பாகவும் பயனுள்ள வகையிலும் நடைமுறைப்படுத்தப்படுவதற்கு ஆசிரியர் மேற்பார்வையாளர்கள், பாடசாலைத் தலைவர்கள் மற்றும் கல்வி அதிகாரிகள் வழங்கும் ஆதரவும் முக்கியமானது எனவும் தெரியவந்தது.
இத் திறன் வெளிப்பாடு, மாணவர்கள் கடந்து வந்த பாதையையும் அவர்கள் அடைந்த முன்னேற்றத்தையும் கொண்டாடியதுடன், எதிர்காலத்திற்கான பெறுமதிமிக்க கற்றல்களையும் வழங்கியது. பிரிட்டிஷ் கவுன்சில், கல்வி அமைச்சு மற்றும் அதன் கல்விப் பங்காளர்களுடன் இணைந்து இலங்கையில் மேலும் பல இளைஞர்களுக்கு வாய்ப்புகளை உருவாக்குவதற்காக NextGen Skills அணுகுமுறையை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயும் பணியை தொடர்ந்து முன்னெடுக்கும். அதேவேளை, இலங்கையில் சமத்துவமான, அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பொருத்தமான கல்விக்கான தனது பரந்த அர்ப்பணிப்பையும் பிரிட்டிஷ் கவுன்சில் மேலும் வலுப்படுத்தும்.





























