Sep 23, 2026 - 06:13 PM

டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுகளுக்குட்பட்ட இருவேறு பகுதிகளில் உள்ள வர்த்தக நிலையங்கள், ஒரே இரவில் உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ள சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
குறித்த கொள்ளைச் சம்பவங்களில், டயகம நகரில் அமைந்துள்ள சில்லறை வர்த்தக நிலையம் ஒன்றிலிருந்து பொருட்கள் திருடப்பட்டுச் செல்லும் காட்சிகள், அங்கு பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கமராவில் பதிவாகியுள்ளன.
அவ்வர்த்தக நிலையத்திலிருந்து பணம், தொலைபேசி மீள்நிரப்பு அட்டைகள் (Recharge Cards), பீடி மற்றும் சிகரெட் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்படி, சுமார் 12 இலட்சம் ரூபா பெறுமதியான பொருட்கள் மற்றும் பணம் கொள்ளையிடப்பட்டுள்ளதாக டயகம பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
இதேவேளை, அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மண்ராசி பகுதியிலும் சில்லறை வர்த்தக நிலையம் ஒன்று உடைக்கப்பட்டு கொள்ளையிடப்பட்டுள்ளது. அங்கிருந்து பொருட்களுடன் சுமார் இரண்டு இலட்சம் ரூபா பணமும் கொள்ளையிடப்பட்டுள்ளதாக அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவாகியுள்ளது.
ஒரே இரவில் இருவேறு பகுதிகளில் இடம்பெற்றுள்ள இக்கொள்ளைச் சம்பவங்களால், அப்பகுதி மக்கள் மற்றும் வர்த்தகர்கள் மத்தியில் அச்ச நிலை ஏற்பட்டுள்ளது.
இச்சம்பவங்கள் தொடர்பில் டயகம மற்றும் அக்கரப்பத்தனை பொலிஸார், சிசிடிவி கமரா காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். அத்துடன், கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதற்கான நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.































