Sep 24, 2026 - 01:48 PM

நுவரெலியா, கண்டி உள்ளிட்ட மலையகத்தின் பல பகுதிகளிலும் இன்று (24) அதிகாலை முதல் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகின்றது. இதனால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியாக மழை பெய்து வருவதுடன், பல பகுதிகளில் கடுமையான பனிமூட்டம் காணப்படுவதால், வீதிகளில் வாகனங்களைச் செலுத்தும் போது மிகுந்த அவதானத்துடன் இயக்குமாறு சாரதிகளுக்கு ஹட்டன் பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இடைவிடாது பெய்து வரும் மழை காரணமாக நீர்த்தேக்கங்களின் நீர்மட்டம் வேகமாக அதிகரித்து வருகின்றது. அந்தவகையில் காசல்ரீ மற்றும் மவுசாக்கலை ஆகிய நீர்த்தேக்கங்கள் வான்பாயும் அளவை எட்டியுள்ளதாக நீர்த்தேக்கங்களுக்குப் பொறுப்பான பொறியியலாளர்கள் தெரிவித்தனர்.
மேலும், சில பகுதிகளில் சிறிய அளவிலான மண்சரிவுகளும் ஏற்பட்டுள்ளன.
தொடர் மழை காரணமாகத் தோட்டத் தொழிலாளர்கள், கட்டிடத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் உள்ளிட்ட பல தரப்பினரின் அன்றாட ஜீவனோபாய நடவடிக்கைகள் பாதிக்கப்பட்டுள்ளன.
நுவரெலியா மாவட்டத்தில் உள்ள சில பாடசாலைகளில் மாணவர்களின் வருகை குறைவாகக் காணப்பட்டதாகவும் தெரியவருகின்றது.
சீரற்ற காலநிலை நீடிப்பதால் ஆறுகளில் நீராடுவதையோ, நீர்வீழ்ச்சிகளைப் பார்வையிடச் செல்வதையோ மற்றும் மண்சரிவு அபாயமுள்ள பகுதிகளுக்குப் பயணிப்பதையோ தவிர்த்துக் கொள்ளுமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பொதுமக்களிடம் கேட்டுக் கொண்டுள்ளனர்.































