Sep 25, 2026 - 12:27 PM

மத்திய மலைநாட்டில் கடந்த சில நாள்களாகக் காற்று, இடி மற்றும் மின்னலுடன் கூடிய கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது. இன்று (25) காலை முதலும் பலத்த காற்றுடன் கூடிய மழை தொடர்ந்து பெய்து வருகின்றது.
கடந்த 20 ஆம் திகதி முதல் இடைவிடாது பெய்துவரும் இக்கடூர மழையினால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக, நுவரெலியா மாவட்டத்தின் பல பகுதிகளில் தொடர்ந்து கடும் மழையுடன் கூடிய அடர்ந்த பனிமூட்டம் காணப்படுகிறது.
குறிப்பாக நுவரெலியா பிரதான நகர், ஹாவா - எலிய, கந்தப்பளை, நானுஓயா, டெஸ்போட், ரதல்ல குறுக்கு வீதி மற்றும் தலவாக்கலை போன்ற பகுதிகளில் இன்று அதிகாலை முதல் நிலவும் இக்காலநிலையால் கடும் குளிரும் நிலவி வருகின்றது.
அடர்ந்த பனிமூட்டம் காரணமாக வீதிகளில் எதிரே வரும் வாகனங்களைக் காண்பதில் பெரும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் விபத்துகளைத் தவிர்க்கும் பொருட்டு, வாகனங்களின் வேகத்தைக் குறைத்துச் செலுத்த வேண்டும் எனவும், முகப்பு விளக்குகளை (Fog Lights) ஒளிரவிட்டுப் பயணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், முன் செல்லும் வாகனங்களுக்கும் தமக்கும் இடையில் போதிய இடைவெளியைப் பேணுவது அவசியம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக வாகனப் போக்குவரத்து நிலவும் நுவரெலியா - பதுளை, நுவரெலியா - ஹட்டன் மற்றும் நுவரெலியா - கண்டி ஆகிய பிரதான வீதிகளில் பயணங்கள் மேற்கொள்ளும்போது மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு வலியுறுத்தப்பட்டுள்ளது.
நீரேந்து பிரதேசங்களில் பதிவாகும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக அணைக்கட்டுகளின் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது.
லக்ஷபான, மேல்கொத்மலை ஆகிய நீர்த்தேக்கங்களின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதுடன், நோட்டன் பிரிட்ஜ் நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டுக்கு மேலாக நீர் வழிந்தோடுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
அத்துடன், மத்திய மலைநாட்டில் நிலவும் கனமழை காரணமாக விமலசுரேந்திர நீர்த்தேக்கமும் வான் பாயத் தொடங்கியுள்ளது. இதனால் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் அவதானமாக இருக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
தொடர்ச்சியாகப் பெய்து வரும் மழை காரணமாகப் பல இடங்களில் மண்சரிவு அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே, மண்திட்டுகளுக்கு அருகில் வசிப்பவர்கள் அவதானமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
ஹட்டன் - கொழும்பு மற்றும் ஹட்டன் - நுவரெலியா பிரதான வீதிகளின் பல இடங்களில் சிறிய அளவில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளன. இதனால் போக்குவரத்து பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ள போதிலும், மழை நேரங்களில் பயணிக்கும் வாகன சாரதிகள் மிகுந்த கவனத்துடன் வாகனங்களைச் செலுத்துமாறு இடர் முகாமைத்துவ நிலையம் கேட்டுக்கொண்டுள்ளது.































