Sep 27, 2026 - 09:55 AM

நோ'ஈஸ்டர் (Nor'easter) புயல் காரணமாக அமெரிக்காவின் நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.
கடலோரப் பகுதிகள் வெள்ளத்தில் மூழ்குதல், மின் தடை, போக்குவரத்து ஸ்தம்பிப்பு, திறந்தவெளி மைதானங்களில் நடைபெறவிருந்த பல்வேறு நிகழ்வுகள் இரத்து செய்யப்படுதல் போன்ற பல பாதிப்புகளை ஏற்படுத்தியவாறு, சக்திவாய்ந்த ‘நோ'ஈஸ்டர்’ புயல் தற்போது அமெரிக்காவின் வடகிழக்கு திசையை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கிறது.
இதன் காரணமாக கோடிக்கணக்கான மக்கள் கடும் நெருக்கடி நிலையை எதிர்நோக்கியுள்ளனர்.
அமெரிக்க தேசிய வானிலை சேவையின் அண்மைக்கால அறிக்கையின்படி, நியூயோர்க் மற்றும் பாஸ்டன் உள்ளிட்ட பல பகுதிகளில் கடுமையான கடலோர வெள்ளப்பெருக்கு, பலத்த காற்று மற்றும் கனமழை பெய்யக்கூடும்.
இதன்காரணமாக நியூயோர்க் மற்றும் நியூ ஜெர்சி மாநிலங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டுள்ளதுடன், வர்ஜீனியா முதல் மேய்ன் வரையிலான பகுதிகளில் கனமழையும் பலத்த காற்றும் வீசக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது.
மோசமான வானிலை காரணமாக பாஸ்டனில் நடைபெறவிருந்த புகழ்பெற்ற பாடகர் எட் ஷீரனின் (Ed Sheeran) இசைக்கச்சேரியும் இரத்து செய்யப்பட வேண்டிய நிலை ஏற்பட்டது.
இப்புயல் காரணமாக 100,000 க்கும் மேற்பட்ட வீடுகளுக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளது.
மேலும், 1,199 விமானங்கள் முழுமையாக இரத்து செய்யப்பட்டுள்ளதுடன், 2,400 க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகியுள்ளன.































